நடிகர் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. ட்ரீம் வாரியர் தயாரித்துள்ள, இதில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகி பாபு, கே.ஜி.எஃப். வில்லன் ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ஷர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது. தற்போது இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கார்த்தி பகிர்ந்துகொண்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் 'சுல்தான்' கதை தந்தைக்காக மகன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். ஆனால் மகனுக்கு வாழ்க்கை லட்சியம் வேறு. தந்தையின் சொல்லிற்காக அதைச் செய்ய முடிவெடுக்கிறான். அதன் பிறகுதான் அவனுக்குத் தெரிகிறது நூறு பேரை சமாளிக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்களை எப்படி கட்டி மேய்க்கிறான் என்கிற சவால்தான் சுல்தான் திரைப்படம். 20 நிமிடங்கள்தான் பாக்கியராஜ் கண்ணன் இக்கதையைக் கூறினார். கேட்ட உடனே ஒப்புக் கொண்டேன்.
அதன் பின்பு, உணர்வுகள் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூற, பாக்கியராஜ் கண்ணன் அதை அமர்க்களமாக ரெடி பண்ணினார். அதேபோல், நகைச்சுவை கதையில் தானாகவே வந்து அமர்ந்துவிட்டது. இப்படத்தில் என்னை சுல்தான் என்று லால் சார் செல்லமாக அழைப்பார்.
யோகி பாபுவுடன் முதன்முதலாக இணைந்து இப்படத்தில் நடிக்கிறேன். அவர் செய்யும் நகைச்சுவையில் விழுந்துவிழுந்து சிரித்தேன். நீங்கள் படம் பார்க்கும்போது தெரியும். யோகி பாபு படத்தில் ஒரு திருப்புமுனையாக இருப்பார்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலே அவ்வளவு போராட்டம் வருகிறது. ஆனால், 100 பேர் இருந்தால் அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே யோசனை செய்துகொள்ளுங்கள். அங்கு, நகைச்சுவை, சண்டை, கேலி, கிண்டல், அவமானம் என்று அனைத்தையுமே கொண்டுவர முடியும். அதற்காக ஒன்றரை ஆண்டு காலம் நேரம் எடுத்து கதையை மெருகேற்றினார். இப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கான படமாக நிச்சயம் இருக்கும்.
ராஷ்மிகா இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் அப்பாவுடன் சிறு வயது முதலே தமிழ்ப் படங்களைப் பார்த்துவந்திருக்கிறார். நீண்ட நாள்களாக அவர் கிராமத்துப் பெண் பாத்திரத்திற்காகக் காத்திருந்திருக்கிறார். இப்பட வாய்ப்பு கிடைத்ததும் எனக்கும், அப்பாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது என்று என்னிடம் கூறினார். நாடு முழுவதும் அவர் பிரபலமடைந்த பிறகும் அவர் இயல்பாக இருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.
இப்படத்தின் படிப்பிடிப்பு கடவூரில் நடத்தினோம். அந்த ஊர் மக்கள் மிகவும் பாசத்தோடு பழகினார்கள். தினமும் பலவித உணவு ஆசையாகக் கொடுத்தார்கள். அங்குள்ள சிறுவர்கள் நடிகர் என்பதை மறந்து வாங்க அண்ணா கிரிக்கெட் விளையாடலாம் என்று அழைப்பார்கள். எனது ஒவ்வொரு படமும் இயக்குநர்களின் இரண்டாவது படமாக அமைவது திட்டமிட்டு நடப்பது அல்ல, தானாக நிகழ்வது.
இப்படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துவருகிறேன். முத்தையா இயக்கத்தில் ஒரு படமும் பி.எஸ். மித்திரன் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறேன்.
'பொன்னியின் செல்வன்' படத்திற்காக நான் நிறைய புத்தகம் படிக்க வேண்டியிருந்தது. அப்போது 1,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் நிர்வாகம், நீர் மேலாண்மை போன்ற விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.
கரோனா காலத்தில் அப்பாவிடம் கேட்டு சில புத்தகங்களைப் படித்தேன். இயல்பு வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதேபோல், சோழர்களின் வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் எனது நண்பர்களிடம் கேட்டு சில புத்தகங்கள் படித்தேன். மேலும், கரோனா காலத்தில் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து அதில் விளைந்த புடலங்காய், கீரை போன்ற பல காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிட்டோம்.
எங்கள் வீட்டில் எப்போதும் சிறு தானிய உணவுகளைத்தான் உண்போம். இந்த வகையான உணவுகளைச் சாப்பிடப் பழகிவிட்டால் மற்ற உணவுகள் பிடிக்காது. சென்னையில் கிடைப்பதெல்லாம் பாலிஷ் செய்யப்பட்டவை.
ஆகையால், இயற்கையான உரம் போட்டு விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களை நேரடியாகச் சென்று வாங்கிவருவோம். உணவு விஷயத்தில் அப்பா கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவார். வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்து நாட்டுச் சர்க்கரையை உபயோகப்படுத்துக்கின்றோம்" என்றார்.