ஈரோடு மாவட்டம் கிளாம்பாடி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் காலிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது காலிங்கராயனுக்கு நன்றி செலுத்தும்விதமாக காலிங்கராயன் வாய்க்காலில் முளைப்பாரி விட்டு கார்த்தி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, "700 ஆண்டுகளுக்கு முன் நன்றாக இருந்த காலிங்கராயன் வாய்க்கால் கடந்த 40 ஆண்டுகளில் சீரழிந்துவிட்டது. காலிங்கராயன் வாய்க்காலை நாம் ஒன்றிணைந்து சீர்செய்ய வேண்டியது அவசியம்.
இங்குள்ள நீர் முழுவதும் மாசடைந்ததற்குக் காரணம் யார் என்பது தெரியும். ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் சாயக் கழிவுகள் காலிங்கராயன் வாய்க்காலில் கலந்து மாசடையச் செய்கிறது.
நிறைய பணம் சம்பாதித்தாலும் ஆரோக்கியத்தை இழந்தால் எதுவும் செய்ய முடியாது. அடுத்தவர் ஆரோக்கியத்தை பாழ்படுத்துவது கொடுமை. ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் கடிதம் எழுத வேண்டும். அதைப் படித்து அவர்கள் சரிசெய்ய வேண்டும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் விவசாயத்தை விடக் கூடாது" எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னாதாக இந்த நிகழ்ச்சியில், நடிகர் கார்த்தி, பொதுமக்கள் காலிங்கராயன் ஆற்றை முழு அளவிற்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.