மலையாள திரையுலகில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக கொடிக்கட்டி பறந்துவருபவர் நடிகர் மம்மூட்டி. இவர் கடந்த 1971ஆம் ஆண்டு 'அனுபவங்கள் பாலிசகள்' படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
ஆனால் அப்படம் வெளியாவதற்கு முன்பு, அவர் கதாநாயகனாக நடித்த, 'வில்க்கண்ணுண்டு ஸ்வப்னங்கள்' என்ற படம் வெளியானது. கதாநாயகனாக நடித்த முதல் படமே மெகா ஹிட் அடித்ததால், மம்மூட்டிக்கென ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதனையடுத்து அவர் வரிசையாக மலையாளத்தில் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியடைய மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன.
அந்த வரிசையில் தமிழில் இவர் 'மௌனம் சம்மதம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் ரஜினியுடன் அவர் நடித்த தளபதி திரைப்படம் ரசிகர்களிடம் அதிகமாக கொண்டு சேர்த்தது. மேலும் இவர் 'மறுமலர்ச்சி', 'ஆனந்தம்', 'கார்மேகம்', 'அழகன்' ரஜினியுடன் 'தளபதி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் திரைத்துறையில் நுழைந்து 50 ஆண்டுகளை கடந்துள்ளார். இன்று பார்ப்பதற்கு 30 வயதுபோல் இருக்கும் மம்மூட்டிக்கு 70 வயது என்று சொன்னால் நம்ப முடிக்கிறதா? ஆம்... மம்மூட்டி இன்று தனது 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனையொட்டி அவருக்கு மலையாள திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துகளைக் காலை முதல் சமூக வலைதளங்களில் பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில் 70ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மம்மூட்டிக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " வணக்கம் மம்மூட்டி சார். உங்களுக்கு 70 வயது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என்னைவிட உங்களது வயது, குறைவாக இருக்கும் என்றே நினைத்தேன்.
வயதில் வேண்டுமானால் நீங்கள் அதிகமாக இருக்கலாம், ஆனால் திரைத்துறையில் நான்தான் சீனியர். இந்த ஆரோக்கியத்தை அப்படியே பாதுகாத்துக்கொள்ளுங்கள். சீனியர் சிட்டிசனிடமிருந்து மற்றொரு சீனியர் சிட்டிசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து" எனக் கூறியுள்ளார்.