கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜகமே தந்திரம்'.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தை, 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள, இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் வரும் ஜுன் 18ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜுன்.7) 'ஜகமே தந்திரம்' படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடப்பட்டன. இசை வெளியீட்டை முன்னிட்டு, நேற்று இரவு 8.30 மணியளவில் 'ஜகமே தந்திரம்' படத்தின் இசைக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினார்கள். இதனை அலெக்சாண்டர் பாபு தொகுத்து வழங்கினார். இதில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது தனுஷிடம் 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்துள்ள சுருளி கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தனுஷ்,' 'ஜகமே தந்திரம்' படம், பாடல்கள் வெளியீட்டுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். சிறந்த சூழலில் இந்தப் படம் வெளியாகியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இது போன்ற மகிழ்ச்சியற்ற காலகட்டத்தில் மக்களுக்கு சில பொழுதுபோக்கு, மகிழ்ச்சியைக் கொடுக்கும் என நம்புகிறேன். எனது திரையுலக வாழ்க்கையில் சுருளி எனக்குப் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று. கார்த்திக் சுப்புராஜிடம் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எழுதுமாறு கேட்டுள்ளேன். அந்தளவுக்கு எனக்கு இந்தக் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்' என்றார்.
இதையும் படிங்க : போலிக் கணக்கு தொடங்கிய நபருக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்விராஜ்