இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தாதா 87'. இதில் லோக்கல் தாதாவாக நடித்திருந்த சாருஹாசனின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குநர் விஜய் ஸ்ரீ, சாருஹாசனை கதாநாயகனாக வைத்து தாதா 87 - 2.0 படம் உருவாக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், "தாதா 87 பட டீசர் வெளியானபோது உலகளவில் ட்ரெண்டானது. படம் வெளியாகி படத்தை பார்த்த பலரும் சாரு ஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக் கூடாது என கேட்டனர். அதனை அடிப்படையாக கொண்டுதான் தற்போது நடிகர் சாருஹாசனை வைத்து முழுநீள தாதா படம் இயக்க திட்டமிட்டோம்.
பலம் என்பது உடல் வலிமையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அது மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல சாணக்கியனாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, உள்ளூரில் சாமான்யனாக தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்பதை அடிப்படையாக வைத்து தாதா 87- 2.0 படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மைம் கோபி பூத்துக் மற்றும் கூத்துப்பட்டறையை சேர்ந்த பலர் நடித்திருக்கின்றனர், இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, லாக் டவுன் தொடங்குவதற்கு முன்பு 7 நாட்கள் நடைபெற்றது.
மீண்டும் படத்தின் படப்பிடிப்பு லாக் டவுன் தடை நீக்கத்திற்கு பின் அரசின் கட்டுப்பாட்டுகளோடு தேவையான படக்குழுவினரோடு சென்னை, கேரளா மற்றும் கோவாவில் நடைபெற உள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளிவரவுள்ளது" என்று கூறியுள்ளார்.