மத்திய அரசு சமீபத்தில் 67ஆவது தேசிய விருதை அறிவித்தது. இதில் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மரக்கர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் சிறந்த திரைப்படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த வி.எஃப்.எக்ஸ். ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருது வென்றது.
மே 13ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அசோக் செல்வன், மலையாள நடிகர்கள் நெடுமுடி வேணு, முகேஷ், சித்திக், இயக்குநர் ஃபாசில், ரெஞ்சி பணிக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தேசிய விருது வென்றது குறித்து அசோக் செல்வன் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நடிகர்கள் மட்டுமே, ஒரு பிறப்பில் பல வாழ்க்கை பாத்திரங்கள் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதிய பிறப்பாகப் பிறந்து, அதில் வாழ்ந்து பார்க்கும், ஆசி அவர்களுக்குக் கிடைக்கிறது. இந்தச் சுழற்சி திரையில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தாலும் சிலரது மட்டுமே நடிகர்களின் மனத்திற்கு நெருக்கமான பாத்திரமாக இருக்கும். அதில் சில பாத்திரங்கள் வசூலில் மிகப்பெரும் வெற்றியைப் பெறுகிறது. சில பாத்திரங்கள் விமர்சகர்களிடம் சிறப்பான பாராட்டுகளைப் பெறுகிறது.
சில பாத்திரங்கள் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்கிறது. மிகச் சொற்பமான பாத்திரங்களே அனைத்து வகையிலும் முழுமையடைகிறது. அம்மாதிரியான பாத்திரங்கள் நடிகர்களின் அடையாளமாகிவிடும். என்னுடைய 'மரக்கர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' அந்த வகையிலான ஒரு அழகான திரைப்படம். இந்திய அளவில் எல்லா வகைகளிலும் சிறந்ததொரு நடிகரென, புகழ்பெற்ற நடிகர் மோகன்லால் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, நான் மிகப்பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.
அந்த நொடியை சொற்களால் விவரித்துவிட முடியாது. பிரியதர்ஷன் போன்ற வரலாற்றுப் பெருமைகொண்ட இயக்குநரின் படத்தில் நடிப்பது மிகப்பெரும் பெருமை. சினிமாவின் அத்தனை சாத்தியங்களையும் தினசரி படப்பிடிப்பில் அவரிடம் கற்றுக்கொண்டேன்.
மிகப்பெரும் பட்ஜெட்டில், மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து உருவாக்கியுள்ள இத்திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியடையும் என்னும் நம்பிக்கையை, அனைவருக்கும் தந்துள்ளது.
விநியோக களத்திலும் திரையரங்கிலும் இப்படம் கொண்டாடப்படும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அனைத்தையும் கடந்து, மிகப்பெரும் பெருமை, மிகப்பெரும் மகிழ்ச்சி யாதெனில் எங்கள் திரைப்படம் சிறந்த படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த உடை வடிவமைப்பு என மூன்று தேசிய விருதுகளை வென்றிருப்பதுதான். 2020 மிக இனிமையான ஆண்டாகத் தொடங்கியது.
எனது திரைப்படம் 'ஓ மை கடவுளே' ஒரு நடிகராக மிகப்பெரும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த 'மரக்கர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் மூலம் மிகப்பெரும் அடையாளம் கிடைக்கும் என்று காத்திருந்தேன். ஆனால் பொதுமுடக்கம் காரணமாகப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது படத்திற்குக் கிடைத்திருக்கும் தேசிய விருதுகள் படத்தின் மீது இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஒரு நடிகராகத் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கில் 'நின்னில நின்னில', மலையாளத்தில் 'மரக்கர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என மற்ற மொழித் திரைப்படங்களிலும் பணியாற்றுவது, சினிமா குறித்து நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவத்தைத் தருகிறது.
இந்நேரத்தில் இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த, தயாரிப்பாளர் ஆண்டனி பெரம்பாவூர் அவர்களுக்கும், நடிகர் மோகன்லால் அவர்களுக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.