கர்நாடகாவில் பிறந்த அர்ஜுன், மறைந்த பிரபல கன்னட திரைப்பட நடிகரான ஜே.பி.ராமசாமியின் மகன் ஆவார். ஆகஸ்ட் 15ஆம் தேதி 1964ஆம் ஆண்டு பிறந்த அர்ஜுன் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
Simhada Mari Sainya என்ற கன்னட மொழி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஏழு படங்கள் மட்டுமே கன்னட சினிமாவில் நடித்தார். அதன் பிறகு கோலிவுட் பக்கம் அவரது ஆர்வம் திரும்பியது. 'நன்றி' என்ற படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான அர்ஜுனுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.
புரூஸ்லியின் தீவிர ரசிகரான அர்ஜுன், அவரைப் பின்பற்றி கராத்தே கற்றுக்கொண்டு சிறந்த ஆக்ஷன் காட்சிகளை தன் படங்களில் வெளிப்படுத்தினார். தனக்கு என்ற ஒருவிதமான ஸ்டைலால் சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்திய அவரை ரசிகர்கள் 'ஆக்ஷன் கிங்' என்று வாஞ்சையாக அழைக்கத் தொடங்கினர்.
ஷங்கரின் முதல் படத்திலேயே ஹீரோ
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என தற்போது நாம் கொண்டாடும் ஷங்கர், இயக்குநராக அறிமுகமான படம் தான், 'ஜென்டில்மேன்'. முதலில் இப்படத்தில் நடிக்க நடிகர் கமல்ஹாசனை ஷங்கர் அணுகியுள்ளார். ஆனால், அவர் அக்கதையை நிராகரித்ததால் அந்த வாய்ப்பு அர்ஜுனுக்கு கிடைத்தது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவருக்கு வெற்றி தனக்கான பாதையை அமைத்துக் கொடுத்தது.
முதல்வன் அர்ஜுன்
அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான படம் 'முதல்வன்'. ஒருநாள் முதல்வராக அர்ஜுன், ரகுவரனுக்கு பதிலாக நாற்காலியில் அமர்ந்து செய்த புரட்சி அப்போதைய காலக்கட்டத்தில் ’டாக் ஆஃப் த டவுன்’. ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மனதில் வைத்து தான் எழுதிய கதை 'முதல்வன்'
ஆனால் அவர் அதனை நிராகரிக்க, இந்த வாய்ப்பும் அர்ஜுனுக்கே கிடைத்தது. தேர்ந்த பத்திரிகையாளருக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வாறு இருக்கும் என்ற ஒன்லைனை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த முதல்வன் படம் அர்ஜுனின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம்.
தேசப்பற்று கொண்டவர்
நாட்டின் மீது மிகுந்த தேசப்பற்று கொண்டவரான அர்ஜுன் 'ஜெய்ஹிந்த்' என்ற படத்தைத் iயக்கி, தயாரித்து நடித்திருந்தார். ஐபிஎஸ் அலுவலராக மிக இயல்பாக அப்படத்தில் அவர் நடித்த நிலையில், ரசிகர்களால் இப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது.
சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் இன்றும் கூட எதாவது ஒரு தொலைக்காட்சியில் 'ஜெய்ஹிந்த்' படம் கண்டிப்பாக ஒளிபரப்பாகும்.
தீவிர ஆஞ்சநேயர் பக்தர்
ஆஞ்சநேயர் மீது தீவிர பக்தி கொண்ட அர்ஜுன் சென்னை போரூரில் உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். 180 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆஞ்சநேயர் சிலை, தன்னுடைய 17 ஆண்டு கனவு என அவர் கோயில் குடமுழுக்கு விழாவில் தெரிவித்திருந்தார்.
பன்முகத் தன்மை கொண்டவர்
நடிகராக அறிமுகமான அர்ஜுன் 150 படங்களில் நடித்திருப்பது மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருகிறார். இவர் சுதந்திர தினத்தில் பிறந்தால் தான் என்னவோ, இயல்பிலேயே தேசப்பற்று இவருக்குள் இருக்கிறது போல!
இன்று தனது 59ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்... இதனையொட்டி #HBDArjun, #HappyBirthdayArjun #HBDஆக்ஷன்கிங்அர்ஜுன் ஆகிய ஹேஷ் டாக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: மெழுகுக் குரலோன் உன்னி மேனன் பிறந்தநாள்!