ஆடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்த விழாவில் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அருண் பாண்டியன், இயக்குநர் பார்த்திபனும் பங்கேற்றனர்.
விழாவில், நடிகர் அருண்பாண்டியன் பேசுகையில், 'இக்கதையையும், அமலா பாலின் கதாபாத்திரத்தைக் கேள்விபட்ட பிறகு இப்படம் இயல்பான படம் இல்லை என்று இப்படத்தை வெளியிட முடிவு செய்தேன். இப்படம் இந்தியா முழுவதும் பேசப்படும். தணிக்கைக் குழுவே இப்படத்தை பாராட்டியிருக்கிறது" என்றார்.
இயக்குநர் ரத்னகுமார் கூறுகையில்,"இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இப்படம் அமலா பாலுக்கு பிடித்திருந்ததால் உயிரைக் கொடுத்து நடித்தார். இப்படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றி பேசும் படமாக இருக்காது. இயக்குநர் பார்த்திபன் எப்போதும் எல்லோரும் போகும் பாதையில் பயணிக்கமாட்டார். அவர் தான் எனக்கு உத்வேகமாக இருந்தார். ஆடை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ? என்று பலர் தலைப்பு போட்டு எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன்" என்றார்.
பின்னர் பார்த்திபன் பேசுகையில், "ஆண்களைவிட பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள். தைரியமானவர்கள். பெண்களை மையப்படுத்தி ஒரு படம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நல்லப் படம் எடுப்பதற்கு 30 வருட காலமாக தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்" என்றார்.