சில இயக்குநர்கள் தங்களுக்கென்று பிரத்யேக ஜானரில் தொடர்ச்சியாக முத்திரை கதைகளைப் பதித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிப்பர். அப்படி, தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை, உறவுச்சிக்கல்களை அதன் வெவ்வேறு பிரச்னைகளை துல்லியமாகப்படம்பிடித்தவர், இயக்குநர் சிகரம் பாலசந்தர்.
1930ஆம் ஆண்டு, தற்போதைய திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி என்னும் கிராமத்தில் பிறந்த கே.பாலசந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி கல்லூரிப்படிப்பை முடித்தார்.
மேடை நாடகத்துறையில் தனது எழுத்துப்பணியைத் தொடங்கிய கே.பாலசந்தர் 1965ஆம் ஆண்டு நீர்க்குமிழி என்னும் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குநர் ஆக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து எதிர் நீச்சல், அவள் ஒரு தொடர்கதை, ஆபூர்வ ராகங்கள், வறுமையின் நிறம் சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், தண்ணீர் தண்ணீர், சிந்து பைரவி, புன்னகை மன்னன், தில்லு முல்லு, ஹிந்தியில் ஏக் துஜே கே லியே உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடும்படியான படங்களை இயக்கியுள்ளார். கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான சில சினிமாக்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
எதிர் நீச்சல்:
ஒண்டுக்குடித்தனத்தில் மாடிப்படிக்குக் கீழே வசிக்கும் ஒருவர், அங்கு இருக்கும் குடும்பதாரர்களுக்கு உதவிகளைச் செய்து, அதற்கு ஈடாக உணவினைப் பெற்றுக்கொண்டு, அதுமட்டுமல்லாது சிறுசிறு வேலைகள் செய்து கல்லூரிப்படிப்பு படித்து எவ்வாறு முன்னேறுகிறான் என அச்சு அசலாக தனது எதிர்நீச்சல் படத்தில் காட்டியிருப்பார், கே.பாலசந்தர். அவருடைய கதை மாந்தராக முத்திரைப் பதித்திருப்பார், நாகேஷ்.
அவள் ஒரு தொடர்கதை:
தனது குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல், வேலைக்குச் செல்லும் ஒரு நடுத்த வயதுடைய பெண்ணின் கதை தான், அவள் ஒரு தொடர்கதை. இதில் குடும்ப பாரம் சுமக்கும் கதையின் நாயகி கவிதாவாக வாழ்ந்திருப்பார், நடிகை சுஜாதா.
வறுமையின் நிறம் சிவப்பு:
1980-களில் நாட்டின் தலைநகரான டெல்லியில் கல்லூரிப்படிப்பை முடித்த சில தமிழ் பேசும் இளைஞர்கள் வேலைகிடைக்காமல் படும் பாடுகளை உயிர்ப்புடன் சொல்லி, வெளிவந்த படம் வறுமையின் நிறம் சிகப்பு. இப்படத்தின் காலகட்டம் தற்போதைய சூழலுக்குப் பொருந்தும்படி இருப்பதுவே இயக்குநர் பாலசந்தரை நாம் ஆராதிக்க முக்கியக் காரணம் எனலாம். இதில் சுந்தரம் ரங்கன் என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் கதை மாந்தராக நடித்திருப்பார்.
தண்ணீர் தண்ணீர்:
ஒரு குடும்பப் பெண், தனது குடும்பத்திற்காக பல்வேறு கிலோமீட்டர் சென்று குடிநீரை சுமந்து வரும் அவல நிலையை, அதன் ஈரப்பதம் குறையாமல் பாலசந்தர் உருவாக்கிய படம் தான், தண்ணீர் தண்ணீர். அதில் ஒரு கரிசல்காட்டு கிராமப்பெண்ணின் துயரினை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இயக்குநராக ஜொலித்திருப்பார், கே.பாலசந்தர். இப்படம் பின்னர் தேசிய விருதினை தட்டிச் சென்றது. இதில் கதையின் நாயகியாக நடிகை சரிதா தடம் பதித்திருப்பார்.
இதையும் படிங்க: 'அழகன்' மம்மூட்டிக்கு காட்சி விளக்கும் 'இயக்குநர் சிகரம்' பாலசந்தர்!