1961ஆம் ஆண்டு மே 27 அன்று 'பாசமலர்' திரைப்படம் வெளியானது. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இன்றுவரையில் ரசிகர்களிடையே பாசம் குறையாமல் உள்ளது. சிவாஜி கணேசன், சாவித்திரி இருவரும் போட்டி போட்டு நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கலங்க வைத்தனர். இந்தப் படம் வெளியாகி 58 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்துக்கு பிறகு எத்தனையோ அண்ணன், தங்கை செண்டிமெண்ட் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பாசமலர் படத்தை தாண்டிய படம் வெளியாகவில்லை. ஒரு வீட்டில் அண்ணன், தங்கை பாசமாக இருந்தால், இவுங்க பெரிய ‘பாசமலர்’ சிவாஜி-சாவித்திரி என்கிற சொல்லுவது இன்றுவரையில் தொடர்கிறது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் இறுதிக்காட்சி, அண்ணன் - தங்கை இருவரும் ஒன்றாக இறந்துபோவது காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதன்பிறகு வந்த சினிமாக்களில் எல்லாம் பாசமிக்க தங்கையின் வாழ்க்கையை பாதுகாக்க அண்ணன் போராடுவது போலவே காட்சியமைப்புகள் இருக்கும் அல்லது தங்கைக்காக தியாகம் செய்யும் அண்ணன் என இருக்கும்.
இதன் இறுதிக்காட்சியில் இருவரும் கைகோர்த்து இறந்துகிடப்பார்கள், ‘பாசமலர்’ படத்தைப் பார்த்துவிட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியே வந்ததாக அந்தக்காலத்து ஆட்கள் பேசிக்கொள்வார்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் உருவான ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள், அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்’ என்ற பாடல் அண்ணன் - தங்கை பாசத்தை பறைசாற்றியது. இன்று வரையில் காலத்தால் அழியாத அன்புக் காவியமாக நிற்கிறது ‘பாசமலர்’.