ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என்று அந்தக் கால ராஜாவின் கதையை ஆரம்பிப்பார்கள். ஆனால், தமிழ் சினிமாவின் கதையிலும், கடைசி 45 வருட மனிதர்களின் கதையிலும், இனி வரும் தலைமுறைகளின் கதையிலும் எப்போதும் ஒரே ராஜாதான் உயிருடன் இருப்பார்.
காலம்சென்ற நடிகர் விவேக் கூறியதுபோல் இளையராஜா என்பது ஒரு நிகழ்வு. வளர்ந்த சூழலும், வாழ்க்கையும் இயற்கை உரம் போட்டு அனுப்ப பல பாரம்பரியங்களை உடைத்தெறிந்த நிகழ்வு இளையராஜா.
ஓரம் போ ஓரம் போ பாடலை ஆல் இந்தியா ரேடியோ தடை செய்யும் அளவுக்கு அந்த பாட்டின் வரிகளிலும், இசையிலும் அவ்வளவு இருந்தன. குறிப்பிட்ட மேடைக்குத்தான் இசை சொந்தம், அந்த மேடை ஏறுபவர்களுக்குத்தான் இசை தெரியும் என்ற சூழலில், மக்கள் இசையை மக்களுக்காகக் கொடுத்து போலி பிம்பத்தை உடைத்தார்.
சமீபத்தில் ஒரு கதையாசிரியர் கொடுத்த பேட்டியில் இளையராஜா குறித்தும் அவரது கடந்த காலம் குறித்தும் ஆதிக்க மனப்பான்மையோடு பேசியிருந்தார். அந்த மனப்பான்மையின் மூலம் இளையராஜா அடைந்துள்ள உயரம் இன்றளவும் சிலருக்கு செரிக்கவில்லை என்பது தெளிவாகும்.
மிகப்பெரிய சாம்ராஜ்யமாக இருக்கும்போதே அவர் மீது இப்படிப்பட்ட வன்ம தாக்குதல்கள் நடக்கிறது என்றால் அவர் சினிமாவுக்குள் நுழைந்தபோதும், வளரும்போதும் எவ்வளவு நடந்திருக்கும் என்பதை எளிதாக யூகிக்கலாம்.
ஆனால், அவர் மீது நடந்த அத்தனை தாக்குதல்களையும் ஆர்மோனியத்திலிருந்து சுரந்த தனது இசை படை மூலம் தடுத்தார். அவருடன் இருந்தவர்களே இளையராஜாவின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் இருந்தனர். அத்தனையும் அவருக்கு தெரியும்தான். இருந்தாலும் இளையராஜா இன்னமும் உயிர்ப்புடன் இருக்க காரணம் இளையராஜா மட்டுமே.
அவர் தோப்பில் இருந்தாலும் தனி மரமாகவே வளர்ந்தார், சில தோப்புகளையும் தனி ஆளாகவே உருவாக்கினார். சேரிக்கும் சேர வேணும் அதுக்கும் பாட்டு படி என்று வைரமுத்து சிந்துபைரவிக்காக திரையில் எழுதியிருந்தாலும் அதை நிஜத்தில் செய்து காட்டியவர் இளையராஜா.
’அன்னக்கிளி உன்னத் தேடுதே’ என்ற அவரது பாடலை கேட்ட பிறகுதான் வரப்பில் இருந்தவரின் சுவாசம் இசையானது, சுட்டெரிக்கும் வெயிலிலும் ஜீவன் குளிர்ந்தது. அதன் பிறகு இளையராஜாவிடமிருந்து வெளிவந்த ஒவ்வொரு இசையும் ஒரு உன்னதத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த உன்னதத்தை அவர் நிகழ்த்துவதற்கு ஏகப்பட்ட வன்மங்களை சந்தித்து வெல்ல வேண்டியிருந்தது.
இளையராஜா கர்வம் பிடித்தவர் என்று கூறுபவர்களுக்கு அவரிடம் இருப்பது கர்வம் இல்லை அதுதான் அவரது கவசம் என்பது எப்போதும் புரியாது. கர்ணனுக்கு எப்படி கவசகுண்டலம் அவசியமோ அதேபோல் ஞானிக்கும் அந்தக் கவசம் எப்போதும் அவசியம்.
இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் இசையை கொடுத்து கொடுத்து அவரது மூளை இன்னமும் சோர்வடையாமல் இருப்பதற்கு ஒன்றே ஒன்றுதான் காரணம் அவர் மீது சிலருக்கு வன்மம் இருப்பதுபோல் அவருக்கும் யார் மீதும் வன்மமில்லை.
நான் பல இசையமைப்பாளர்களை உருவாக்கினேன் என்று ஒரு பாடலாசிரியர் கூறினாலும், இளையராஜா மூன்று தலைமுறைகளாக எந்த சலனமுமின்றி பயணிக்கிறார்.
ஏனெனில், அவர் தன்னில் சுரக்கும் இசையை எந்த கலப்படமுமின்றி கொடுப்பவர்களில் ஒருவர். அதுவும் தனது ஒவ்வொரு இசையையும் கலப்படமின்றி கொடுப்பதற்கு 45 வருடங்களாக அவரது உழைப்பையும், சேர்த்த பக்குவத்தையும், அனுபவத்தையும் மொழிக்குள் அடக்க முடியாதது.
நமது முந்தைய தலைமுறை, காதல் சொல்வதற்கும், சோர்வடையாமல் இருப்பதற்கும் உதவிய இளையராஜா, ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள் மத்தியில் தனது விதையை விதைத்து எப்படி காடாக வளர வேண்டும் என்பதற்கு தற்போதைய தலைமுறைக்கு ஒரு பாடமாக தொடர்கிறார். அதேபோல் அடுத்த தலைமுறைக்கு அனைத்தாகவும், எப்போதும் ராஜாவாகவே இருப்பார்.
இனி வரும் காலங்களில் அவர் மீது வன்மங்கள் கொப்பளிக்கப்பட்டால் எதிர்ப்புகள் உடனடியாக எழுந்து நிற்கும். ஏனெனில் அவருக்கு 3 தலைமுறை பலம் இருக்கிறது...