1982ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வெளியான கிளாஸிக் திரைப்படம், மூன்றாம் பிறை. தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த 25 படங்களை பட்டியலிட்டால் பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறைக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு. அப்பாவி இளைஞனுக்கும், குழந்தையாக மாறியிருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே பூக்கும் மெல்லிய உறவும், அவள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், இளைஞனின் நிலையும்தான் இப்படம்.
சீனுவாக கமலும், விஜியாக ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். அதில், அவர்களுடன் நடித்த 'சுப்பிரமணி' எனும் நாயும் நம் அன்பை பெற்றிருக்கும். ஊட்டி அருகே உள்ள கெட்டி எனும் இடத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பாலு மகேந்திராவின் கேமராவில் ஊட்டி இன்னும் ஒருபடிமேலே அழகாகத் தெரிந்தது.

தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது கமலுக்கும், ஒளிப்பதிவாளர் விருது பாலு மகேந்திராவிற்கும் கிடைத்தன. ஆனால் சிறந்த நடிகைக்கான விருது ஸ்ரீதேவிக்கு வழங்கப்படவில்லை. இது அக்காலகட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இளையராஜா, ஓர் இசை ராஜாங்கமே நடத்திய திரைப்படம் இது. இப்படம், 330 நாள்களுக்கு மேல் ஓடி பெரும் வெற்றியை பெற்றது. ’வசந்த கோகிலா’ எனும் பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்ட இப்படம், 1983ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி நடிப்பில் ’சந்த்மா’ என்ற தலைப்பில் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தையும் பாலு மகேந்திராவே இயக்கினார்.

கண்ணாதாசனின் கடைசி துளிகள்
மூன்றாம் பிறை, கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிய கடைசி திரைப்படம். அவரின் 'கண்ணே கலைமானே...' பாடலை ரசிக்காதவர்களே இல்லை எனலாம். உயிரில்லா இசைக்கருவிகள் வாயிலாக உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தியிருந்தார் இளையராஜா.
ஒருமுறை, பாலு மகேந்திரா இப்படம் குறித்து கூறியபோது "மூன்றாம் பிறை படத்தின் கதையை முதலில் ஸ்ரீதேவியிடம்தான் கூறினேன். அதைக் கேட்டவுடன் அவர் உருகி அழத்தொடங்கி விட்டார். பிறகு கமல்ஹாசனிடம் கதையை சொன்னேன். ’எனக்கு இது சரிப்பட்டு வருமா?’ என்று கமல் முதலில் சந்தேகப்பட்டார். ’நிச்சயம் இது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்’ என்று சொல்லி சம்மதிக்க வைத்தேன்” என்று கூறியிருந்தார்.

மலையில் இருந்து கொட்டுகிற அருவி பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்போது தோன்றும் அழகே தனிதான். அதுபோல் கொட்டுகிற அருவியாக ஸ்ரீதேவி இருந்தார். பட்டுத் தெறிக்கிற பாறையாக கமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு தேசிய விருது
கிடைத்தது என்று அப்போது கூறியிருந்தார்கள்.
இப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.