இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் வெற்றி, தோல்விகள் ஒரே வாரத்தில் நிர்ணயிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஒரு சில நாட்களிலும் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், 1980களில் நிலைமை அப்படியில்லை 50,100,300 நாட்களை சாதாரணமாக கடந்து வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். அந்த வகையில், 1989ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி, திரைக்கு வந்து மெகா ஹிட் அடித்த படம் தான் 'கரகாட்டக்காரன்'.
இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் இயக்கத்தில், நடிகர் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நடிப்பில், 365 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடி, மெகா ஹிட் அடித்தது இப்படம்.
நாட்டுப்புறக் கலைகளையும் அந்தக் கலைஞர்களின் நகைச்சுவை உணர்வு, காதல், போட்டி ஆகிய உணர்வுகளைக் கொண்டு, கலகலப்பான திரைக்கதையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது, கரகாட்டக்காரன்.
ராமராஜனின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது 'கரகாட்டக்காரன்'. இதேபோன்று நடிகை கனகா திரையுலகிற்கு அறிமுகமான படமும் இதுதான்.
இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் வந்த
"மாங்குயிலே பூங்குயிலே";
"குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டு";
"இந்த மான் உந்தன் சொந்த மான்";
"ஊர விட்டு ஊரு வந்து";
"பாட்டாலே புத்தி சொன்னாள்";
"முந்தி முந்தி விநாயகரே" போன்ற அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்று, இந்தப் படத்தை மற்றொரு கட்டத்திற்கு நகர்த்தியது. இப்படத்தின் வெற்றிக்கு இசை மிக முக்கிய காரணமாக அமைந்தது, என்றால் அது மிகையல்ல.
அதுமட்டுமல்லாமல், இளையராஜா இசை அமைப்பின் மூலம் மீண்டும் நாட்டுப்புறக் கலைகளுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது என்றே கூறலாம்.
நாட்டுப்புறக் கலைகளும் இசையும் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும் இந்தப் படம், கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து நடித்த நூறாவது படமாகவும் அமைந்ததால், கூடுதலாக நகைச்சுவையில் இருவரும் பிரித்து மேய்ந்து இருப்பர்.
அதில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பத உதாரணம், வாழைப்பழ காமெடி காட்சி. இன்றளவும் இக்காட்சியைத் திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை என்பதே இக்காட்சிக்கு மக்களிடையே கிடைத்த அங்கீகாரம்.
அதேபோல், 'காரை வச்சுருந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சுருக்க' என்கிற வசனமும் இன்றும் நம்முடன் மீம்ஸ் வடிவில் உயிர்ப்புடன் உள்ளது.
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாடல்களாலும், காமெடியாலும், காதல் கதை அமைப்பாலும் பெரும் வெற்றிபெற்ற 'கரகாட்டக்காரன்', 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது.
திரைக்கு வந்து ஆண்டுகள் பல கடந்தும் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த 'கரகாட்டக்காரன்' வெளிவந்து, இன்றுடன் 31 ஆண்டுகள் ஆகின்றது.