சூரியன் திரைப்படம் 1992 ஆகஸ்ட் 14 அன்று வெளியானது. கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில், இப்படத்தை இயக்குநர் பவித்ரன் எழுதி இயக்கினார். சரத்குமார், ரோஜா, கவுண்டமணி, ஆச்சி மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் ஷங்கர், இப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டுப்பற்று, அர்ப்பணிப்பு உணர்வினைக் கொண்ட பிரதமரின் தலைமைப் பாதுகாப்பு அலுவலரின் கதையை மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கும் திரைப்படம் இது.
கதைக்களம்
இந்தப் படத்தில், பெங்களூருவில் நடைபெறும் விழா ஒன்றில் பிரதமரைப் படுகொலை செய்வதற்காக, கதாநாயகன் சூரியனிடம் (சரத்குமார்) உள் துறை அமைச்சராக வருபவர் பேரம் பேசுகிறார்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து சரத்குமார் அமைச்சரை கொலை செய்துவிடுகிறார். உண்மை தெரியாமல் அவரை காவலர்கள் கைதுசெய்ய தேடுகிறார்கள். அங்கிருந்து தப்பி கோயம்புத்தூர் டாப்சிலிப் செல்கிறார் சூரியன். அங்கு அவருக்கு செட்டியார் அம்மாவின் (மனோரமா) உதவி கிடைக்கிறது.
இந்த வேளையில் மனோரமா, ஊரில் தன்னை ஒரு அரசியல்வாதியாகக் காட்டிக்கொள்ளும் ராமசாமியிடம் (கவுண்டமணி) சூரியனுக்கு ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுக்குமாறு உதவி கோருகிறார். கவுண்டமணியும், கூப்பு கோனார் (ராஜன் தேவ்) என்னும் முக்கியப் பிரமுகரின் ஒரே மகளான உஷாவின் (ரோஜா) கார் ஓட்டுநர் பணியை வாங்கிக் கொடுக்கிறார்.
சூரியனின் உண்மை கதையை ரோஜா கண்டுபிடித்துவிடுகிறார். அதனால் சரத்குமார், அவரிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது.
இதனிடையே, மிக்கி (பாபு ஆண்டனி) என்னும் வில்லன் கோனாரின் பாதுகாப்பில் இருந்து, பிரதமர் பொள்ளாச்சி வரும்போது அவரைக் கொலைசெய்ய திட்டமிடுகிறான். இந்தத் திட்டத்தை முறியடித்து சூரியன், பிரதமரைக் காப்பாற்றுகிறார். இறுதியில் பிரதமர் சூரியனைச் சந்தித்து அவரது அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிக்கிறார்.
படத்தின் பலம்
சரத்குமாரின் கதாபாத்திரம், திருப்புமுனைகள், படத்தின் வெற்றி ஆகியவை ஒருபுறமிருக்க, இத்திரைப்படத்தில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பேசுபொருளாக அமைந்திருக்கின்றன.
குறிப்பாக, 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்னும் அவரது வசனம், அதற்கு முந்தைய காட்சியில் ஓட்டவாய் நாராயணன், (பசி நாராயணன்) 'போன் ஓயர் அந்துபோய் நாலு நாளாச்சு' என்று பேசும் வசனம் மிகவும் பிரபலமானது.
அதேபோல, 'சூரியனை யாரும் சுட முடியாது சூரிய வெப்பம்தான் நம்மல சுடும்', 'நாராயணா இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியலடா' போன்ற கவுண்டமணியின் கவுன்டர் பன்ச்-கள் பட்டைய கிளப்பும். இந்தத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகின்றன.
29 years of சூரியன்
இதையும் படிங்க: 43 ஆண்டுகள் நிறைவு- ராதிகாவுக்கு சரத்குமார் வாழ்த்து