மலையாள சினிமா உலகில் வரும் படங்களில் பெரும்பாலும் ஃபீல் குட் படங்களாக இருக்கின்றன என சமீபமாக பேச்சுக்கள் அதிகம் கேட்கின்றன. எனில், தமிழில் ஃபீல் குட் சினிமாவே வந்ததில்லையா?
21 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ‘ரிதம்’ என்ற திரைப்படம் வெளியாகி தமிழின் சிறந்த ஃபீல் குட் படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது. ரிதம் படத்தை 2k கிட்ஸ்களில் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது தெரியாத பதில்.
ஆனால், ரிதம் படம் என்ன செய்யும் என்ற கேள்விக்கு தெரிந்த பதில் ஒன்று இருக்கிறது. அந்தப் படம் நதி மேலே மிதக்கும் இலக்கற்ற இலையாய் அமைதியை நோக்கி நம்மை அழைத்து செல்லும். ரிதம் என்ற சொல்லை படிக்கும்போதே படிப்பவருக்குள் ஒரு மெல்லிய உணர்வு எழும். அதுபோல், படத்தின் பெயரை ஸ்க்ரீனில் பார்க்கும்போதே ரிதம் என்ற சொல், மிதந்து கொண்டிருக்கும் இலை மேல் அமர்த்தி ரசிகனை இதே உலகத்துக்குள் வேறு திசையை நோக்கி அழைத்து செல்லும்.
பிரதான கதாபாத்திரங்கள் என எடுத்துக்கொண்டால் மொத்தமே பத்துக்குள்தான் இருக்கும். அந்த பத்து கதாபாத்திரங்களும் இரண்டு தசாப்தங்கள் கடந்து இன்னமும் ரசிகர்களுடன் இருப்பதற்கு காரணம் ஈரமும், கதாபாத்திரங்கள் அதை அளவாய் பொழிந்த விதமும்.
வாழ்க்கையில் உறவை இழந்தவர்களின் வெறுமையையும், தவிப்பையும், அவர்களின் அடுத்த வாழ்வுக்கான தொடக்கத்தையும் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி போகிறபோக்கில் வெகு இயல்பாக கூறியதன் மூலம் வசந்த் என்ற இயக்குநர் சினிமாவுக்கு ஏன் அவசியப்படுகிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.
கார்த்திக்கின் தந்தை - தாய், வீட்டு அனுமதியோடு திருமணம் செய்துகொண்ட கார்த்திக் - அருணா, வீட்டு எதிர்ப்பில் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீகாந்த் - சித்ரா என இந்த மூன்று ஜோடிகளுக்குள்ளும் மிகப்பெரிய காதல் ஆர்ப்பாட்டமின்றி ததும்ப ததும்ப ஓடும்.
கையில் பிடித்து பட்டாசு வெடிக்கும் கார்த்திக்கிற்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்று கண்களால் பதறுவது, அருணாவுக்கு பிடிக்காத வேலையை உதறிவிட்டு அதை அருணாவிடம் கூறுவது என அருணாவும், கார்த்திக்கும் (ஜோதிகா - அர்ஜுன்) ஹைக்கூ கவிதைகள்.
வாழ்க்கை துணையை இழந்துவிட்டு ஒரு ஆண் தனியாக இருந்தாலே பலவற்றை பேசும் உலகத்தில் ஒரு பெண் தனியாக வசிப்பது அவ்வளவு எளிதானதல்ல. தனது கணவரின் ஆசையை நிறைவேற்ற குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதலிருந்து, கார்த்திக்கிடம் கறாரில் ஆரம்பித்து கார்த்திக்குடன் வாழ்க்கையில் இணைவது என ரணமான வாழ்க்கையில் மதிக்கப்பட வேண்டிய காதல் கவிதை சித்ரா (மீனா).
உலகத்தின் மிகச்சிறந்த நடிகர்களில் நாகேஷ் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. சித்ரா தனது வீட்டுக்கு வரும்போது “நீயும் கார்த்திக்கும் ஒன்னா ஒர்க் பண்றிங்களா எக்ஸ்பிரஸ்ல” என்பதில் யதார்த்தத்தையும், “நீ, கார்த்திக், நான், என் வீட்டுக்காரம்மா, அந்த சின்ன பையன் எல்லாரும் ஒரே வீட்ல இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்” என்று ஏக்கத்தையும், ”நீ பேசிருந்தா ஒழுங்கா இருந்துருக்கும் நான்தான் அவசரப்பட்டுட்டேன்” என்று குற்றவுணர்ச்சியையும் கலந்து நாகேஷ் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஆட்சி செய்திருப்பார்.
கேரியர் சாப்பாடு குறித்து குறை கூறிவிட்டு, “என்ன பெரிய அப்பளம் தயிர்” என்று மகனின் தொலைந்துபோன வாழ்க்கை குறித்தும், தாய் மீது மகன் வைத்திருக்கும் பாசம் குறித்தும் பேசி நாகேஷ் கலங்கும் இடமும்; தனது மகன் இரண்டாவது வாழ்க்கைக்கு தயாராக மாட்டானா என்ற ஏக்கத்தோடு காத்திருப்பது, திருமணத்திற்கு சித்ரா மறுத்ததும், “நீ ரொம்ப நல்லவன்ப்பா உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடக்கலாம்” என்று கார்த்திக்கிடம் அவரது தாய் (வத்சலா ராஜகோபால்) கலங்குவது என கார்த்திக்கின் பெற்றோர் எமோஷனல் கவிதைகள்.
குறிப்பாக தனது திருமண வாழ்க்கை குறித்தும், மனைவி இறந்துபோனதையும் கார்த்திக் கூறி முடித்ததும் சித்ராவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருக்க திரையில் கிட்டத்தட்ட 25 நொடிகள் ஒரு மௌனம் நிகழும்.
அந்த மௌனம் என்பது புயலுக்கு பின்னான அமைதி போன்றது. அந்த மௌனத்தை வைப்பதற்கு தனது திரைமொழி மீது அபார நம்பிக்கை இருந்தால் மட்டுமே முடியும். அதேபோல் சித்ரா தனது திருமண வாழ்வு குறித்தும், கணவரின் இறப்பு குறித்தும் கூறி முடித்ததும் நிகழும் ஒருவித அமைதி என நிச்சயம் தமிழ் சினிமாவில் ரிதம் புதுக்கவிதை.
இப்பட இயக்குநரும், கதாபாத்திரங்களும் தங்களது பங்கை இப்படி செய்ய, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது பங்குக்கு படத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றிருப்பார்.
பாடலுடன் படம் தொடங்குவது தமிழில் அரிதிலும் அரிது. ரிதம் படத்தை வசந்த் “நதியே நதியே” பாடலோடு தொடங்கியிருப்பார். பஞ்ச பூதங்களை வைத்து பாடல்களை உருவாக்கியது, பாடலுக்கு ரஹ்மான் கொடுத்த இசை என ரிதம் விஷுவல் ட்ரீட் மட்டுமின்றி ஒரு மியூசிக்கல் ட்ரீட்.
முக்கியமாக ரஹ்மானின் பின்னணி இசை. படத்தின் ஒரு காட்சியில், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சித்ரா தனது கணவரின் தாயோடு ஊட்டி சென்றதும் கார்த்திக்கின் தாய்க்கும், தந்தைக்கும் பெரும் விரக்தி தொற்றிக்கொள்ளும். கார்த்திக் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை வெளியில் காண்பிக்க முடியாமல் பரிதவிப்பார்.
அப்படிப்பட்ட சூழலில் மும்பை ரயில் நிலையத்தில் கார்த்திக் சோகத்தோடு அமர்ந்திருக்கும்போது கேமரா ஊட்டியை நோக்கி நகரும். அந்த இடத்தில் ரஹ்மான் பின்னணி இசை அதுவரை சோகத்திலும், ஏமாற்றத்திலும் இருந்த கார்த்திக்கிற்கும், ரசிகர்களுக்கும் நிவாரண கவிதை.
ரஹ்மானின் இசை இப்படி என்றால் வைரமுத்துவின் வரிகள் பெரும் நதி. நதியே நதியே பாடலில் தொடங்கி படத்தின் ஐந்து பாடல்களிலும் வைரமுத்து தனது ஆளுமையை பறைசாற்றியிருப்பார். இப்படி ரஹ்மானும், வைரமுத்துவும் ரிதத்தில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய தமிழ் கவிதைகள்.
வஞ்சமும், வன்மமும் தலைக்கேறி திரியும் மனிதர்கள் மத்தியில் ரிதத்தில் உலாவிய மனிதர்கள் அனைவருமே பேரன்பை பொழிந்தவர்கள். இப்படிப்பட்ட மனிதர்களை நிஜ வாழ்க்கையில் சந்தித்துவிட மாட்டோமா என்று ஏங்க வைப்பவர்கள். அவர்களது உலகம் மிக மிக சிறியது. வலியோடு நகர்வது.
கார்த்திக் தரப்பில் சித்ராவிடம் திருமணத்திற்கு அனுமதி கேட்பதாகட்டும், அதை சித்ரா மறுப்பதாகட்டும், தன்னை வேண்டாமென்று ஒதுக்கிய கணவரின் தாய்க்காக தனக்குள் தோன்றிய அடுத்த வாழ்வு பற்றிய எண்ணத்தை புதைப்பதாகட்டும்; அந்த மனிதர்களின் சொல், செயல் என அனைத்திலும் பக்குவமும், அன்பும் மட்டுமே எட்டிப்பார்க்கும்.
வலியோடும், வெறுமையோடும் வாழ்க்கை நகர்ந்தாலும் வாழ்வு ஒன்றும் நம்மை அப்படியே விட்டுவிடாது என்பதை இவ்வளவு எளிமையாக, அமைதியாக ரிதம் போல் இனி சொல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியே.
வசந்த் எழுதியது, எடுத்தது காட்சிகளின் அடுக்குகள் என்பதைவிட கவிதைகளின் அடுக்குகள் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். புயல்கள் சூழ்ந்திருக்கும் ஒருவரது மனதுக்கு நல்ல கவிதை என்ன கொடுக்கும். நம்பிக்கை கொடுக்கும், சோகம் கொடுக்கும், நிம்மதி கொடுக்கும், புத்துணர்ச்சி கொடுக்கும். அதைத்தான் ரிதமும் செய்யும். ஏனெனில், ரிதம் தமிழின் ஃபீல் குட் கவிதை.