’அருந்ததி’ படத்தை பார்த்தவர்கள் எல்லாம், படத்தின் மேக்கிங் அல்லது பிற தொழில்நுட்ப வேலைப்பாடுகள் குறித்து பேசவேயில்லை. இந்த அனுஷ்கா என்னடா இப்படி நடிச்சிருக்கா என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அதற்குக் காரணம் ’அருந்ததி’ படத்துக்கு முந்தைய அனுஷ்காவின் திரைப்பயணம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பெண்கள் பாலியல் ரீதியாக சொரண்டப்படும் திரைத்துறையில், அனுஷ்காவுக்கு கதாநாயகியை மையப்படுத்திய கதாபாத்திரங்கள் எதுவும் அமையவில்லை. கதாநாயகனுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் பேருக்காக வந்துபோவது, கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடுவது போன்ற ஸ்டீரியோடைப்புக்குள் சிக்கித் தவித்தார்.
இந்த ஸ்டீரியோடைப்பை உடைக்க அனுஷ்காவுக்கு கிடைத்த ஆயுதம்தான் ‘அருந்ததி’. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, தான் வழக்கமான கதாநாயகி அல்ல, தனித்துவமான நடிகை என்பதை நிரூபித்துக் காட்டினார். அதன்பிறகும் அவரைத் தேடி வழக்கமான கதாபாத்திரங்கள் வந்தாலும், அதில் அனுஷ்காவின் நடிப்புக்கு ஸ்கோப் இருந்தது என்று சொல்லலாம்.
அனுஷ்காவின் படமான ‘அருந்ததி’
ஒவ்வொரு சினிமா ரசிகரும் படத்தை பார்த்துவிட்டு வந்த பின்பு அதைப் பற்றி சிலாகிக்க பல விஷயங்கள் உள்ளது. இயக்கம், கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு என ஒரு படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இவற்றை பற்றிதான் பெரும்பான்மையான ரசிகர்கள் பேசுவார்கள். ஆனால் வெகு சில படங்கள் மட்டுமே இவையனைத்தையும் மறக்கச் செய்து படத்தின் மைய கதாபாத்திரத்தை பற்றியே நம்மை பேச வைக்கும். அப்படியான படமாக ‘அருந்ததி’ மாறியதற்கு அனுஷ்காவின் பங்களிப்பு மிக முக்கியமானது.
தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் வெளியாகி ‘அருந்ததி’ திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. தமிழில் மாதவனின் ‘ரெண்டு’ படத்தில் கிளாமர் ரோலில் நடித்திருந்த அனுஷ்காவை, ‘அருந்ததி’ கதாபாத்திரத்தில் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்களும் மிரண்டு போயிருந்தார்கள்.
ஹாரர் த்ரில்லரான ‘அருந்ததி’ படத்தில் அனுஷ்காவுக்கு ஜக்கம்மா, அருந்ததி என இரண்டு வேடம். இது அவர் முதன்முதலாக இரட்டை வேடத்தில் தோன்றிய படமாகும். படம் தோன்றி சிறிது நேரம் வரை மிக இயல்பாக இருக்கும் அருந்ததி கதாபாத்திரம் வில்லனின் ஆத்மா இருக்கும் பாழடைந்த பங்களாவுக்குள் சென்றபின் ஜக்கம்மாவாக மாறும் காட்சி காண்பவர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
முகத்தை மறைத்தபடி பயந்த குரலில் வில்லனின் குரலுக்கு பதிலளிக்கும் அருந்ததி, ‘உன்னால என்ன எதுவும் பண்ண முடியாதுடா’ என கத்தியபடி ஜக்கம்மாவாக மாறுவார். இந்திய சினிமா வரலாற்றில் ஒரு கதாநாயகிக்கு அமைந்த மாஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன் காட்சி இது என கூறலாம். அதன்பிறகுதான் ‘ஜக்கம்மா’ கதாபாத்திரத்தின் முந்தைய காட்சிகள் விரியும்...
ஜான்சி ராணி, வேலு நாச்சியார், சுல்தானா ரசியா போன்ற வீரப் பெண்மணிகளின் வரலாற்றை நாம் பாடங்களில் படித்திருப்போம். அதுபோன்ற பெண்மணிகளை நேரில் கண்டால் எப்படியிருக்கும், அப்படி ஒரு சிலிர்ப்புணர்வை ‘ஜக்கம்மா’ கதாபாத்திரத்தின் வழியாக நமக்கு கடத்தியிருப்பார் அனுஷ்கா. யானை சவாரி, வாள் வீச்சு காட்சிகளில் பய உணர்வு என்பது துளியும் இல்லாமல் நடித்திருப்பார். இப்படி படம் நெடுக அனுஷ்காவின் நடிப்பை சிலாகிக்க பல காட்சிகள் உண்டு. இந்த படம் தந்த தாக்கம்தான் பல இயக்குநர்களை அனுஷ்காவுக்கு என தனித்துவமான கதாபாத்திரத்தை உருவாக்க தூண்டியது.
அதன்விளைவாக வந்ததுதான் ‘பஞ்சமுகி’, ‘பாகமதி’, ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ போன்ற படங்கள். அனுஷ்காவின் திரைப்பயணத்தை ‘அருந்ததி’ படத்துக்கு முன் அதற்கு பின் என நிச்சயமாக பிரிக்கலாம். அவரது திரைப்பயணத்தை மாற்றியமைத்த ‘அருந்ததி’ வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைகிறது. அனுஷ்காவின் திரைப்பயணம் தொடர வாழ்த்துகள்...