2015ஆம் ஆண்டின் 'மிஸ் டிவா யுனிவெர்ஸ்' பட்டம் பெற்று, 'மிஸ் யுனிவெர்ஸ்' போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர், நடிகை ஊர்வசி ரவுத்தேலா. தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைத் தொடர்ந்து, உற்சாகப்படுத்தி வருகிறார்.
தேசிய ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் திரைத்துறை, வெளியிட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்து வருகிறது. அதன் படி ஊர்வசி ரவுத்தேலா நடிப்பில் உருவாகி உள்ள 'வெர்ஜின் பானுப்பிரியா' படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து ஊர்வசி கூறுகையில், 'டிஜிட்டல் தளத்தில் 'வெர்ஜின் பானுப்பிரியா' பார்ப்பது திரையரங்கில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தான் கொடுக்கும். டிஜிட்டல் தளத்தில் இந்தப் படத்தை நிறைய பேர் பார்ப்பார்கள் என நம்புகிறேன். டிஜிட்டல் தளத்தால், உலக அளவில் அதிகப் பிராந்தியங்களில் பார்ப்பார்கள். இது எனக்கு ஒரு உலக அரங்கேற்றம் போன்றது' என்றார்.
அஜய் லோகன் இயக்கத்தில் வெர்ஜின் பானுப்பிரியா படத்தில் ஊர்வசியுடன் கெளதம் குலாட்டி, அர்ச்சனா புரான் சிங், டெல்னாஸ் இரானி, ராஜீவ் குப்தா, பிரிஜேந்திர கலா, நிகி அனேஜா வாலியா, ஹன்வந்த் காத்ரி, லலித் கிரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கல்லூரிக்குச் செல்லும் பானுப்பிரியா (ஊர்வசி ரவுத்தேலா) தனது கன்னித் தன்மையை இழக்க முடிவு செய்கிறார். இது இன்றைய உலகில் எளிதான காரியமாக இருந்தாலும்; இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றன. பின் அவர் எடுக்கும் முயற்சி வென்றதா... இல்லையா... என்பது மீதிக்கதை. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டிக் டாக்கில் கிடைத்த பணத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய ஊர்வசி!