2013ஆம் ஆண்டு நிகில் அத்வானி இயக்கத்தில் வெளியான படம் ‘டி-டே’ (D-Day). இதில் சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராகிமை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கோல்ட்மேன் கதாபாத்திரத்தில் ரிஷி கபூரும், வாலி கான் எனும் ரா (RAW) அலுவலராக இர்பான் கானும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், உலகம் நம்மை எப்படி கொண்டாடப்போகிறது என நினைத்துப்பார் என்று இர்பானிடம் ரிஷி கேட்பார்.
இவர்கள் இருவரும் ஒரு நாள் இடைவெளியில் உயிரிழந்தாலும், உலகம் இவர்களை ஒரு சேர நினைத்துப் பார்த்து கொண்டாடுகிறது. ரிஷி கபூர் (67), மும்பை சினிமாவின் முதல் குடும்பத்திலிருந்து வந்த மூன்றாம் தலைமுறை நடிகர். திரைத்துறை வாழ்க்கையில் ரிஷி கபூருக்கு பெரிதாக போராட்டம் இல்லை. ஆனால் தனது குடிப்பழக்கத்தை விட்டு வெளியேற மிகவும் சிரமப்பட்டார்.
இர்பான் கான் (53), ராஜஸ்தான் மாநில டோன்க் நகரத்தின் அரச குடும்பத்தை சேர்ந்தவர். தேசிய நாடகப் பள்ளியின் வாயிலாக மும்பை சினிமாவுக்குள் நுழைந்த இர்பான், அதில் முத்திரை பதிக்க சில ஆண்டுகள் தேவைப்பட்டன.
நடிப்பு ரத்தத்திலேயே ஊறிப்போன ரிஷி கபூர், தனது 3ஆவது வயதிலேயே கேமரா முன் தோன்றினார். அவரது தந்தை ராஜ் கபூர் இயக்கி நடித்த ‘ஸ்ரீ 420’ படத்தில் இடம்பெற்ற ‘பியார் ஹுவா’ பாடலில் சிறப்பு தோற்றத்தில் வந்திருப்பார்.
இர்பான் குடும்பம் டயர் வியாபாரம் செய்துவந்தனர். அவர் மும்பைக்கு ஏசி மெக்கானிக் வேலைக்கு வந்தவர். இருவருக்குமான ஒற்றுமை சினிமாவின் மேல் வைத்திருந்த காதல்தான்.
1988ஆம் மிரா நாயர் இயக்கத்தில் வெளியான ‘சலாம் பாம்பே’ படத்தின் மூலம் இர்பான் அறிமுகமானார். வயதின் காரணமாக அவருக்கும் முதலில் வழங்கப்பட்ட கதாபாத்திரம் மறுக்கப்பட்டு, வேறு கதாபாத்திரம் வழங்கப்பட்டது என அப்படத்தின் இணை எழுத்தாளர் சூனி தரபோரெவல்லா நினைவுகூர்கிறார்.
ராஜ் கபூரின் மேரா நாம் ஜோக்கர் (1970) படத்தில் நடித்த பின்பு, 1973ஆம் ஆண்டு அவர் இயக்கத்திலேயே ‘பாபி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ரிஷி கபூர். பாலிவுட் சினிமாவின் கல்ட் கிளாசிக் திரைப்படமாக திகழ்கிறது பாபி. இத்திரைப்படம் 70-களைச் சேர்ந்தவர்களுக்கு நட்பு, காமம் பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. ஜாதி, மதம் கடந்து பிறரை காதலிக்கக் கற்றுத்தந்தது எனலாம்.
ரொமான்ஸ் ஹீரோவாக தனது ஆரம்பகால பயணத்தைத் தொடர்ந்த ரிஷி, நாட்கள் செல்லச் செல்ல யதார்த்த சினிமாவைக் கண்டடைந்தார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியராக அவர் நடித்த ‘டூ டூனி சார்’ (2011), பயங்கரவாதி என சித்தரிக்கப்படும் இஸ்லாமியத்தை நேசிக்கும் மனிதனாக அவர் நடித்த ‘மல்க்’ (2017) ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது.
மனதில் பட்டத்தை அப்படியே கூறுபவர் ரிஷி கபூர். எதிலும் அவருக்கு சென்சார் கிடையாது. அதற்கு அவரது சுயசரிதையான ‘குல்லம் குல்லா’ ஒரு சான்று. அவர் பாகிஸ்தானுடன் அமைதியை விரும்பும் மாட்டுக் கறி உண்ணும் இந்து ஆவார்.
இர்பான் கானும் மனதில் பட்டதை பேசக்கூடியவர், ஆடுகளை பலி கொடுப்பதல்ல குர்பானி என அவர் கூறிய கருத்துக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தபோதும் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அவரது நடிப்புத் திறனும், சினிமா பற்றிய புரிதலும் அவரை சர்வதேச தளத்துக்கு அழைத்துச் சென்றது. ‘தி நேம்சேக்’ (2006 - அசோக் கங்குலி), ‘தி லைப் ஆஃப் பை’ (2012 - பை படேல்), ‘தி லன்ச்பாக்ஸ்’ (2013 - சாஜன் பெர்னாண்டஸ்) உள்ளிட்ட கதாபத்திரங்கள் மறக்க முடியாதவை. அதேசமயம் ஜுராசிக் வேர்ல்ட், இன்பெர்னோ போன்ற ஹாலிவுட் ப்ளாக்பஸ்டரில் வில்லனாகவும் தோன்றியிருக்கிறார்.
‘டி-டே’ படத்தில் இருவரும் தங்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருப்பார்கள். கேங்ஸ்டராக ஆக்ரோஷத்துடனும், திமிருடனும் ரிஷி கபூர் நடித்திருக்க, ரா அலுவலருக்கே உண்டான உடல்மொழியோடு இர்பான் நடித்திருப்பார். இவர்களின் மறைவு குறித்து ‘டி-டே’ இயக்குநர் நிகில் அத்வானி, அவர்களின் மறைவு என்னை எதுவுமற்றவன் போல் உணரச் செய்கிறது என தெரிவித்துள்ளார்.
எழுதியவர்: காவேரி பம்சாய் - பத்திரிகையாளர்