சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், ஆர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா உள்பட எட்டு பேரை அக்டோபர் 2ஆம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (NBC) விசாரணையில் எடுத்தனர்.
இதையடுத்து, ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், ஆர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோருக்கு அக்டோபர் 3ஆம் தேதி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், இம்மூவர் மீதும் போதைப்பொருள் வைத்திருந்தன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானார்கள்.
இது குறித்து மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஆர்யன் கான் உள்பட மூவருக்கு அக்டோபர் 7ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்ட நாளிலிருந்து சில ஊடகங்களும், சமூக வலைதளப்பக்கங்களும் ஆர்யன் கான், ஷாருக்கான் குறித்து தவறான அவதூறுகளைப் பரப்பிவருவதாக ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசான் கான் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்யன் கானின் கைது 'பெற்றோருக்கான விழிப்புணர்வு'ஆக இருக்க வேண்டும் என்று பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டதைப் பதிவிட்ட சுசான் கான் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "ஆர்யன் கான் ஒரு நல்ல குழந்தை. இது அவருக்கு ஒரு மோசமான சூழ்நிலை. ஆர்யன் கான் துரதிருஷ்டவசமாக தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்துள்ளார்.
இந்தச் செய்தி சிலருக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இதன்மூலம் சிலர் ஷாருக்கின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பரப்பிவருகின்றனர்" என்று கூறி தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
ஆர்யன் கானின் கைதுக்குப் பின் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கானின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். ஷாருக் கானின் மனைவி கெளரி கானும் சுசான் கானும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது!