மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு நிதி நெருக்கடி காரணமாக இருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக முதல்கட்ட விசாரணையில், தற்கொலை என வழக்குபதிவு செய்யப்பட்டது. எனினும் தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிடும் விதமாக எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், மன அழுத்தம் காரணமாக அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார் எனவும் பேசப்பட்டது.
இந்நிலையில், அவரது தற்கொலைக்கு நிதிநெருக்கடி காரணமாக இருக்கலாம் என்ற புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் தங்கியிருக்கும் பகுதியான பாந்த்ராவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சொகுசு பிளாட் ஒன்றில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் குடிபெயர்ந்துள்ளார்.
டிசம்பர் 2022 வரை தங்குவதற்கான வாடகை ஒப்பந்தம் செய்துள்ள அவர், அதற்காக ரூ. 12 லட்சத்து 90 ஆயிரம் முன்பணம் செலுத்தியுள்ளார். அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை வீட்டு வாடகையாக ரூ.4 லட்சத்து 51 ஆயிரம் செலுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள சுஷாந்த் உறவினர்கள், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அத்துடன், கடந்த இருநாள்களுக்கு முன்னர் சுஷாந்திடம் பணியாற்றிய அவரது முன்னாள் மேலாளர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக காவல்துறை, உள்ளூர் மக்கள் தரப்பில் அவர் மிகுந்த மனஅழுத்தத்துக்கு ஆளானதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், சுஷாந்தின் உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சுஷாந்தின் மரணம் கொலையாக இருக்கலாம்; சிபிஐ விசாரணை தேவை'