சத்யஜித்ரேவின் திரைப்படங்கள் மற்றும் ஃபெலுடா சீரிஸில் பணிபுரிந்த சௌமித்ர சாட்டார்ஜி வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு பண்பாட்டு அடையாளம், இந்திய சினிமாவின் முன்னோடி ஆவார். பிரான்ஸின் உயரிய விருதான ஆர்ட்ரி டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்ரெஸ் விருதை வென்றே முதல் இந்திய திரைப்பிரலமும் இவரே...
1935ஆம் ஆண்டு சியல்டா ரயில் நிலையம் அருகேவுள்ள மிர்சாபூர் தெருவில் (சூர்யா சென் தெரு) இவர் பிறந்தார். பள்ளிக் காலம் முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு மேடை நாடகங்களில் பங்கேற்று வந்தார். இதில் கிடைத்த வாழ்த்துகளை பார்த்து வியந்த இவர், நடிப்புத் திறனை விரைவாக வளர்த்துக் கொண்டார்.
அபுர் சன்சார் படத்தின் மூலம் சத்யஜித்ரேவால் சௌமித்ர சாட்டர்ஜி அறிமுகப்படுத்தப்பட்டார். இது அப்பு ட்ரையாலஜியில் வந்த கடைசி படமாகும். இதன் முதல் பாகமான ‘பதர் பாஞ்சாலி’ இந்திய சினிமாவில் உருவான மிகச் சிறந்த திரைப்படமாகும்.
சத்யஜித்ரேவின் ‘சாருலதா’ படத்தில் நடிக்கும்போது இவர் மிகச் சாதாரணமான நடிகர். அதன்பிறகு சத்யஜித்ரேவுடன் 15 படங்களில் பணியாற்றியிருக்கிறார். சாட்டர்ஜியை மனதில் வைத்தே சத்யஜித்ரே பல கதைகளை எழுதியுள்ளார். ஃபெலுடா சீரிஸில் புலனாய்வு அதிகரியாக சாட்டர்ஜி தோன்றியிருப்பார்.
டீன் கன்யா, அரன்யர் தின் ராத்ரி, ஹிராக் ராஜர் தேசே, கரே பைரே (ரவீந்திரநாத் தாகூரின் நாவல்), ஷாகா ப்ரொஷாகா ஆகியவை சத்யஜித்ரே - சாட்டர்ஜி கூட்டணியில் உருவான கிளாகிக் திரைப்படங்கள் ஆகும். சாட்டர்ஜி ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். சத்யஜித்ரே அல்லாமல் மிர்னால் சென், தபன் சின்ஹா, தருண் மஜும்தார் உள்ளிட்ட சர்வதேச தரம் வாய்ந்த இயக்குநர்கள் பலருடன் பணியாற்றியுள்ளார்.
கதாநாயகனாக நடிப்பதோடு நில்லாமல், வில்லன் கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்தவர் சாட்டர்ஜி. புரோட்டிஷோத், காகாபாபு ஹீர் ஹெலன், அகுன், சிந்தர் போண்டி ஆகிய திரைப்படங்கள் இதற்கு உதாரணம். பத்ம பூசன், தாதாசாகேப் பால்கே விருது, தேசிய விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
உடல்நிலை சரியில்லாமல் ஒரு மாத காலமாக கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாட்டர்ஜி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 85.
இதையும் படிங்க: '2021ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும்'