டெல்லி: பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது, ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து பாலிவுட் நடிகரும், அரசியல் பிரமுகருமான சத்ருகன் சின்ஹா தனது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் அவர் சென்ற பாகிஸ்தான் பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சத்ருகன் சின்ஹா. இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர். ஆரிஃப் அல்வி, என்னை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்திருந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. லாகூர் பயணத்தில் கடைசி நாளில் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அவரது உபசரிப்பை கண்டு வியப்படைந்தேன்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அவருக்கு மரியாதை செலுத்தியதுடன், கொஞ்ச நேரம் அவருடன் சமூக மற்றும் கலாசார பிரச்னைகள் குறித்து பேசினேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. எனவே இதை நண்பர்களும், ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்நிய மண்ணில் நாட்டின் அரசியல் அல்லது நாட்டின் கொள்கைகள் குறித்த அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத ஒருவர் பேசமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரபல தொழிலதிபர் மியான் அசாத் இஷான் என்பவரின் இல்லத் திருமணத்தில் பங்கேற்பதற்காக லாகூர் சென்ற சத்ருகன் சின்ஹா, அதன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதில், பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரான மியான் அசாத் கிஷான் மற்றும் அவரது மனைவியின் அழைப்பை ஏற்று அவர்களது மகனின் திருமணத்துக்காக லாகூர் சென்றேன். அவர் எனது குடும்ப நண்பர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
என்னுடன் பாஜக-வின் முன்னாள் எம்எல்ஏ-வும், தற்போது காங்கிரஸ் கட்சியின் சக்த வாய்ந்த தலைவராகவும் இருக்கும் ஆஷிஷ் தேஷ்முக்கும் வந்திருந்தார்.
இது முற்றிலும் எனது தனிப்பட்ட பயணமே தவிர, அரசியல் எதுவும் இல்லை. இஷான் மற்றும் புதுமணத் தம்பதிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சத்ருகன் சின்ஹா பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், நடிகர் சத்ருகன் சின்ஹா கோட் சூட் அணிந்து, கழுத்தில் கருப்பு நிற துண்டு அணிந்திருக்க, பாகிஸ்தான் நடிகை ரீமா கான் அவர் அருகே வந்து புகைப்படம் எடுத்துச் செல்கிறார். இதை பார்த்த பலர் சத்ருகன் சின்ஹாவை விமர்சித்து கருத்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது தனது பாகிஸ்தான் பயணம் குறித்தும், அங்கு நடைபெற்ற விஷயங்கள் குறித்தும் புகைப்படங்களை பதிவிட்டு அவர் விளக்கம் அளித்துள்ளார்.