பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறப்புக்குப் பின்னர் பாலிவுட் திரைத்துறையே நெப்போட்டிஸத்தின் வாழ்விடம் என்று நெட்டிஸன்கள் கிழித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கேலி கிண்டலுக்கு பல திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் சிக்கி சின்னாப்பின்னமாகிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக கபூர், கான் குடும்பத்தினர் நெட்டிசன்களின் இந்தச் சீண்டலுக்கு இரையாகியுள்ளனர்.
வெளியிலிருந்து எந்த உதவியும் இன்றி திரைத்துறையில் சாதித்த சில நடிகர்கள் தாங்கள் நெப்போட்டிஸத்தால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிவரும் நிலையில் வாரிசு நடிகர்கள் வாய் திறக்காமலே இருந்தனர்.
சோனாக்ஷி சின்ஹா போன்ற சில நடிகர்கள் நெட்டிசன்களின் இந்தச் சீண்டல் தாங்கமுடியாமல் தங்களது ட்விட்டர் கணக்கைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் வாரிசு நடிகரான சைஃப் அலி கான் தானும் நெப்போட்டிஸத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். நடிகை ஷர்மிலா தாகூருக்கும் மன்சூர் அலி கான் என்னும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கும் பிறந்தவர் சைஃப் அலி கான். இவர் தான் ஒரு வாரிசு நட்சத்திரம் என்றாலும், நெப்போட்டிஸத்துக்கு பலியாகியுள்ளதாகவும், இது குறித்து யாரும் பேசுவதில்லை என்றும் தெரிவித்தார்.
இதை அவர் சொன்ன நேரம் சரியில்லையா எனத் தெரியவில்லை, அவர் சொன்ன கருத்தை நெட்டிசன்கள் ஏற்றுக்கொள்வதாயில்லை. உடனே அவரை மீம்ஸ் கொண்டு கலாய்த்துவருகின்றனர். ஷாருக் கான் நடிப்பில் 'ஸ்வேட்ஸ்' என்னும் திரைப்படம் வெளியான அதே நேரத்தில் சைஃப் அலி கான் நடிப்பில் 'ஹம் தும்' என்னும் திரைப்படம் வெளியானது.
ஷாருக்கான் நடிப்பு 'ஸ்வேட்ஸ்' திரைப்படத்தில் சிறப்பாக இருந்தாலும், சைஃப் அலிக்குத்தான் தேசிய விருது கிடைத்தது. ஷர்மிலா தாகூருக்கு திரைத்துறையில் இருந்த செல்வாக்கினால்தான் சைஃப் அலிகானுக்கு தேசிய விருது கிடைத்தது. இதற்கு நெப்போட்டிஸம் தானே காரணம் என்று ஒரு புறம் சைஃப் அலி கானை இணையவாசிகள் கிழித்துவருகின்றனர்.
இதையும் படிங்க... வரலாற்று உண்மையை சொன்ன சைஃபுக்கு மகாபாரத வகுப்பெடுத்த கங்கனா