இந்தியாவில் தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃபுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனக்கு கோவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது. உடனடியாக என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டுத் தனிமையில் இருக்கப்போகிறேன். எனது மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிவருகிறேன்.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாகத் தங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். உங்கள் அத்தனை பேரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாகவே பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமிர்கான், மாதவன், சஞ்சய் லீலா பன்சாலி, ஆலியா பட், அக்ஷய் குமார், விக்கி கௌசல், கோவிந்தா, பூமி பெட்னேகர் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர்.