கொல்கத்தா: தன்பாலின ஈர்ப்பு பற்றி கதைகளை ஏற்க தேசம் தயாராகிவிட்டது என்று பாலிவுட் நடிகர் ஆயஷ்மான் குர்ரானா கூறியுள்ளார்.
இரு ஆண்களுக்கு இடையேயான காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் 'சுப் மங்கல் ஸியதா சவ்தன்' . இந்தப் படத்தில் ஆயஷ்மான் குர்ரானா, ஜித்தேந்திர குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நடிகை பூமி பெட்னேகர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியாகியிருக்கும் நிலையில், படம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதையடுத்து கொல்கத்தாவில் நடைபெற்ற இலக்கியா விழாவில் பங்கேற்ற நடிகர் ஆயஷ்மான குர்ரானா இப்படம் குறித்து பேசுகையில்,
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃபிலிம்பேர் விருது விழாவின்போது பேட்டி ஒன்றில் தன்பாலின ஈர்ப்பு குறித்து பேசினேன். அந்த வகையில் இதுபோன்ற கதையம்சத்தில் நடிப்பதற்காக தேடினேன். தற்போது 'சுப் மங்கல் ஸியதா சவ்தன்' படம் மூலம் நிகழ்ந்துள்ளது.
இதுபோன்றதொரு கதைகளை ஏற்க தேசம் தயாராகிவிட்டது. இதற்கு 'சுப் மங்கல் ஸியதா சவ்தன்' படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பே சான்றாக உள்ளது.
வெகுஜனங்கள் பார்த்து ரசிக்கும் இந்திப் படமாக தன்பாலின ஈர்ப்பு கதையம்சத்தை கொண்ட படம் வருவது சிறந்த சோதனை முயற்சியாக அமைகிறது. இதனால் மக்களுக்கு, தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீதுள்ள தயக்கத்தை நீக்க நாங்கள் விரும்புகிறோம்.
தன்பாலின ஈர்ப்பை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் இந்தி படமாக அமைந்திருப்பதால் தன்பாலின ஈர்ப்பு மட்டுமல்லாமல், மாற்று பாலின ஈர்ப்பு, இருபாலின ஈர்ப்பு, திருநங்கைகள் போன்ற சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதத்தை ஏற்படுத்தும் என்றும் நம்புவதாகத் தெரிவித்தார்.
தனுஷ் நடித்த ராஞ்சனா, ஷாருக்கான் நடித்த ஸீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த எல் ராய் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஹித்தேஷ் கெவல்யா இயக்கியிருக்கும் இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.