மும்பை: மியூசிக் வீடியோ மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார் 'தங்கல்' படப் புகழ் நடிகை ஃபாத்திமா சனா ஷேக்.
'பால்கீன் கோலோ' (திறந்த கண் இமைகள்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோவை இயக்கியது மட்டுமில்லாமல், நடிக்கவும் செய்துள்ளார் நடிகை ஃபாத்திமா. பஷிர் பத்ர் என்ற உருது கவிஞர் எழுதிய பிரபல கவிதையால் ஈர்க்கப்பட்டு இப்பாடலை அவர் உருவாக்கியுள்ளாராம்.
பாலிவுட் இசையமைப்பாளர், இயக்குநர் விஷால் பரத்வாஜ் பாடலுக்கு இசையமைத்து, பாடியுள்ளார்.
இதுகுறித்து ஃபாத்திமா கூறியதாவது:
கடினமான இந்த நேரத்தில் நம்மைச் சுற்றியிருப்பவர்களை ஊக்குவிக்கும்விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதை உருவாக்குவதற்காகப் பலமுறை விஷால் பரத்வாஜை நச்சரித்தேன். என் தொந்தரவு தாங்க முடியாமல், இதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும் உடனடியாக பணிகளைத் தொடங்கினேன்.
எனது கருத்துகளைக் கேட்ட அவர், என் போக்கில் பாடலைப் படமாக்க முழு சுதந்திரமும் கொடுத்தார். எனது செல்ல வளர்ப்பு பிராணி (நாய்) பிஜிலியும் இதில் சில காட்சிகளில் தோன்றியுள்ளது. விஷால் பரத்வாஜ் இசையமைப்பில் இயக்குநராக அறிமுகமாவதை நற்பேறாகக் கருதுகிறேன் என்றார்.
தனது சகோதரருடன் சாலையோரங்களிலும், வீட்டிலும் வைத்து ஒற்றை ஆளாக இந்த மியூசிக் வீடியோவை எடுத்துள்ளாராம் நடிகை ஃபாத்திமா.
'தங்கல்' படத்தில் ஆமிர்கானின் மூத்த மகளாக நடிப்பில் வெளுத்து வாங்கிய இவர், தற்போது இயக்குநராக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர் - மோடியிடம் கங்கனா ரனாவத் புகார்