1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்டு இந்தியாவிற்கு வெற்றியைப் பெற்று தந்த மேஜர் அயன் கார்டோசோவின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் 'கோர்கா' என்னும் படம் உருவாகி வருகிறது.
சஞ்சய் செளகான் இயக்கும் இப்படத்தில் அக்ஷய்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அக்ஷய்குமார் வழங்கும் இப்படத்தை ஆனந்த் எல்.ராய், ஹிம்மன்சூ சர்மா இணைந்து தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் கோர்கா படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. அதில் அக்ஷய்குமார் ஆக்ரோசமான பார்வையுடன் கையில் கத்தி போன்ற வகையிலான 'குக்ரி' என்னும் கூர்மையான ஆயுதத்தை வைத்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் போஸ்டரில் தவறு இருப்பதாக முன்னாள் கூர்கா அலுவலர், மேஜர் மாணிக் எம்.ஜாலி அக்ஷய்குமாரின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து பதிவிட்டார்.
அதில், 'அன்புள்ள அக்ஷய்குமார் ஒரு முன்னாள் கூர்கா அலுவலராக இந்தப் படத்தை உருவாக்கிய உங்களுக்கு என் நன்றி. எனினும், விவரங்கள் முக்கியம்.
தயவு செய்து குக்ரியை சரியாகப் பிடியுங்கள். கூர்மையான விளிம்பு மறுபுறம் உள்ளது. அது வாள் அல்ல. 'குக்ரி' பிளேட்டின் உள் பக்கத்திலிருந்து தாக்குகிறது. 'குக்ரி' சாதாரணமான கத்தியை விட வித்தியாசமானது. 'குக்ரி' வளைந்த ஒரு கத்தி. அதன் படத்தை இணைத்துள்ளேன். நன்றி.' எனப் பதிவிட்டிருந்தார்.
மேஜர் மாணிக் எம்.ஜாலியின் ட்வீட்டை பார்த்த அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்புள்ள மேஜர் ஜாலி, இதைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. படப்பிடிப்பின் போது நாங்கள் இதில் கவனமாக இருப்போம்.
'கோர்கா' தயாரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். யாதார்த்தத்திற்கு மிக நெருக்கமான எந்த ஆலோசனைகளும் மிகவும் பாராட்டுதலுக்குரியது தான்' எனப் பதிவிட்டார்.
அக்ஷய்குமார், 'சூர்யவன்ஷி', 'அத்ரங்கி ரே', 'ரக்ஷா பந்தன்', 'ராம் சேது', 'பச்சன் பாண்டே' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் 'சூர்யன்வஷி' நவம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.
இதையும் படிங்க: பாத்திரத்தை படகாக மாற்றி திருமணம் - கேரளாவில் ருசிகர சம்பவம்