பாலிவுட்டின் ஆல்டைம் விருப்ப ஜோடியான ஷாருக் கான் - கஜோல் ஜோடியின் நடிப்பில், 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெளியாகி, கோடான கோடி இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம் ’தில்வாலே துல்ஹனியா லே ஜாயிங்கே’.
’டிடிஎல்ஜே’ என சுருக்கமாக, செல்லமாக அழைக்கப்படும் இப்படத்தின் 25ஆவது ஆண்டு தினமான இன்று இப்படத்தின் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டாரும், கிங் கான் எனச் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான நடிகர் ஷாருக்கான் இப்படம் குறித்து சுவாரசியத் தகவல்களை நினைவுகூர்ந்துள்ளார்.
முதலில் தான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தயங்கியதாக தெரிவித்துள்ள அவர், தன்னை பலரும் இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர் அல்ல என்றே கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
”நான் அவ்வளவு அழகான நடிகன் இல்லை என்றே நினைத்தேன். ஆனால் பின் நாளில் ஒரு சாக்லெட் ஹீரோவாக மக்கள் எப்படியோ என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். மேலும் நான் நடிகைகளுக்கு மத்தியில் மிகவும் கூச்சமாகவே உணர்வேன். ரொமான்டிக் வசனங்கள், காதல் ததும்பும் காட்சிகளில் என்னால் இப்படி நடிக்க முடியும் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை” என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
டிடிஎல்ஜேவின் பாடல்களை தான் இன்றளவும் ரசித்துக் கேட்பதாகவும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். ”டிடிஎல்ஜே திரைப்படத்தின் பாடல்கள் ஓடும்போது நான் ஒருபோதும் ரேடியோ சேனல்களை மாற்றியதில்லை. டிடிஎல்ஜேவின் பாடல்கள் எனக்கு ஒருபோதும் சலிப்பூட்டியதில்லை. எனது பாதையை அமைத்துக் கொடுத்த படத்தின் பழைய நினைவுகளுக்கு ஒவ்வொரு முறையும் இந்தப் பாடல்கள் என்னை அழைத்துச் செல்கின்றன” என்றும் ஷாருக் நினைவுகூர்ந்துள்ளார்.