இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தொற்றால், தற்போது அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அனுபம் கெரின் அம்மாவுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக அனுபம் கெர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னுடைய அம்மாவுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.என்னுடைய சகோதரர், அண்ணி, அவர்களது மகன் ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து நானும் பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவில் எனக்குக் கரோனா தொற்று இல்லை என்று முடிவு வெளியானது" என்று கூறியிருந்தார்.தற்போது, கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அம்மாவிற்கு, உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது தாயாரின் த்ரோவ் பேக் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அம்மாவின் உடல்நிலை முன்பைவிட நலமாகி வருகிறது. அதேபோல் ராஜு, ரீமா, பிருந்தாவின் உடல்நிலையும் முன்னேறி வருகிறது. கடவுள் கருணை உள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளார்.