கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தக்கோரி ஏராளமான திரைத்துறை பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். அதில் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் ஒருவர். இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார். அதற்கு முன்பாக, உங்கள் பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுவதையும், மகளுக்கு இணையதளத்தில் மிரட்டல் விடுக்கப்படுவது குறித்தும் யாரும் பேச நினைக்க மாட்டார்கள். குண்டர்கள் ஆளப்போகிறார்கள். புதிய இந்தியாவில் வாழும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என நம்பிகிறேன் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு பதிவில், இதுவே எனது கடைசி பதிவாக இருக்கும். நான் நினைத்ததை பயமின்றிப் பேச அனுமதிக்காதபோது, நான் பேசாமல் இருக்கப்போகிறேன். விடைபெறுகிறேன் எனப் பதிவிட்டு, ட்விட்டரில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
மத்திய அரசு குறித்து விமர்சித்து வந்த நிலையில், குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் இயக்குநர் அனுராக் ட்விட்டரில் இருந்து விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.