போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நடிகை தீபிகாவுக்கு தொடர்பு இருக்கும் என போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக நாளை (செப்டம்பர் 25) விசாரணைக்கு ஆஜராக அவருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நாளை விசாரணைக்கு ஆஜராகவுள்ளதால், இன்று கோவாவில் நடைபெற்ற தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தீபிகா மும்பைக்கு விரைந்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் போதைப் பொருள்களை அதிகம் பயன்படுத்துவதாகவும், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளதெனவும் பேச்சு எழுந்தது. சுஷாந்தின் தோழி ரியா உள்ளிட்ட பல பிரபலங்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை செய்தனர். அந்த வகையில் நடிகை தீபிகா படுகோனையும் அவர்கள் விசாரிக்கவுள்ளனர்.
2017ஆம் ஆண்டு, தீபிகாவும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பற்றி வாட்ஸ்அப்பில் உரையாடியதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தகவல் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் தீபிகாவை விசாரிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தீபிகா தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை விரைந்துள்ளார். அங்கிருந்து கிளம்புவதற்கு முன், நட்சத்திர ஹோட்டலில் அவர் தனது சட்டப்பூர்வ ஆலோசகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தீபிகா படுகோன் நாளை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முன் ஆஜராக உள்ளார். நடிகைகள் சாரா அலிகான், ஷ்ரதா கபூர் ஆகியோர் சனிக்கிழமை அன்று ஆஜராக உள்ளனர்.