பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை, கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாகப் பல முன்னணி கன்னட பிரபலங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னட திரையுலகில் போதைப்பொருள் கலாசாரத்தை கட்டுப்படுத்த, பல்வேறு முயற்சிகளை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கன்னட பிக்பாஸ் சீசன் 4 பிரபலம் மஸ்தான் சந்திரா வீட்டில் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், மஸ்தானிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கர்நாடகாவில் பதுங்கியிருந்த நைஜீரியன் போதைப்பொருள் சப்ளையர் விக்டரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாணவர் விசாவில் இந்தியாவுக்குள் வந்த அவர், ரகசியமாகப் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். அவரிடமிருந்து 40 லட்சம் ரூபாய் பணம், 500 கிராம் போதை மாத்திரைகள், இரண்டு செல்போன்கள், ஒரு எடை கணக்கிடும் கருவியைப் பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'உங்களால் முடிந்தால் வழக்குப்பதிவு செய்துகொள்ளுங்கள்' - மிரட்டிய ஜப்பானியரை கொத்தாக தூக்கிய போலீஸ்