இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், இந்திய சினிமாவின் முன்னணி நடிகையுமானவர் அனுஷ்கா சர்மா. சமீபத்தில் விராட் கோலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இவர் அவ்வப்போது தாய்மை மிளிரும் மகிழ்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் ஆச்சரியப்படுத்திவருகிறார். தற்போது அனுஷ்கா கர்ப்பமான பின் எடுத்த த்ரோ பேக் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் தலைகீழாக யோகாசனம் செய்யும் அனுஷ்காவிற்கு உதவியாக கோலி அவரது கால்களைப் பிடித்தவாறு நிற்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இது குறித்து அனுஷ்கா சர்மா கூறுகையில், "ஹேண்ட்ஸ் டவுன் யோகா பயிற்சி மிகவும் கடினமான ஒன்று. இது சமீபத்தில் எடுத்த புகைப்படம். யோகா எனது வாழ்க்கையின் மிக முக்கியப் பகுதியாகும். கர்ப்பமாக இருப்பதற்கு முன்பு நான் செய்துகொண்டிருந்த பல யோகாசனங்களைத் தற்போது செய்ய முடியவில்லை.
கர்ப்பமாக இருக்கும் நிலையில் சில யோகாசனங்களை நான் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் செய்துவருகிறேன். பல ஆண்டுகளாக நான் செய்துவரும் ஷிர்ஷாசனாவை செய்ய மருத்துவரை அணுகியபோது அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
இந்த யோகாசனத்திற்கு சப்போர்ட்டாக சுவரைத் தேர்வுசெய்தேன். என் சமநிலையை உறுதிசெய்வதற்காக எனது கணவர் கோலி எனது கால்களைப் பிடித்துக்கொண்டார். இதன்மூலம் எனக்கு கூடுதல் பாதுகாப்பும் உறுதியும் கிடைத்தது. இந்த யோகாசனங்கள் அனைத்தும் எனது பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்யப்பட்டது. என் கர்ப்ப காலத்திலும் யோகாசனம் செய்ய முடிந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறியுள்ளார்.