மும்பை: எஃப்இஎம்ஏ எனப்படும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை (Foreign Exchange Management Act) மீறியதாக அமலாக்கத் துறையினர் பாலிவுட் நடிகை யாமி கவுதமுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகை யாமி கவுதமின் வங்கிக் கணக்கில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும், அவருடைய கணக்கில் 1.5 கோடி ரூபாய் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதாகவும் அமலாக்கத் துறை கூறியிருக்கிறது.
இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் அவர் அமலாக்கத் துறையின் அலுவலகத்திற்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை எனவும் தெரியவந்திருக்கிறது. எனவே இந்த முறை அவர் ஆஜராகவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
சர்ச்சையில் சிக்கியிருக்கும் நடிகை யாமி கவுதம், கடந்த ஜூன் மாதம் திடீரென திருமணம் செய்து அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற உரி தாக்குதலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உரி தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக பரிணமித்த ஆதித்யா தர்-ஐ கடந்த ஜூன் மாதத்தில் கரம்பிடித்த யாமி கவுதம், திருமணத்திற்கு பின்னதாக தன்னுடைய திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் அறிவித்தார். உரி படத்தில் யாமி கவுதமும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டு கன்னட படம் ஒன்றில் அறிமுகமான நடிகை யாமி கவுதம், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் விளம்பரங்களில் நடித்து புகழ்பெற்று தற்போது கன்னடம், இந்தி, பஞ்சாபி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த கவுரவம் மற்றும் 2016ல் நடிகர் ஜெய்யுடன் ஜோடியாக தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடித்திருக்கிறார் யாமி கவுதம்.
2012இல் வெளியான சூப்பர் ஹிட் பாலிவுட் திரைப்படமான விக்கி டோனர், பத்லாபூர், ஹிருத்திக் ரோஷனுடன் காபில், ஆயுஷ்மன் குரானாவுடன் பாலா ஆகிய படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். தற்போது அவர் முன்னணி நடிகர்களுடன் 5 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.