ஹைதராபாத்: நடிகர் அமிர் கான், கிரண் ராவ் இடையிலான 15 ஆண்டுகள் திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது. இனி வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை அவர்கள் தொடங்கவுள்ளனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர் கான் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இந்த 15 ஆண்டுகளில் மகிழ்ச்சி, புன்னகை, சுக - துக்கம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டோம்.
பரஸ்பர பிரிவு
எங்களின் உறவு நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பால் வளர்ந்தது. நாங்கள் தற்போது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். எங்களால் நீண்ட காலம் தம்பதியாக நீடிக்க முடியாது. ஆனால் ஒருவருக்கொருவர் நல்ல குடும்பமாக, குழந்தைக்கு பெற்றோராக இருப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “சில காலத்திற்கு முன்பு நாங்கள் இது குறித்து திட்டமிட்டோம். தற்போது இது எங்களுக்கு பயனுள்ளதாக மனப்பூர்வமாக அமையும்படி உள்ளது. எங்களின் மகன் ஆசாத்துக்கு அர்ப்பணிப்புள்ள ஒரு பெற்றோராக இருப்போம். நாங்கள் அவனை ஒன்றாக வளர்ப்போம்.
புதிய பயணத்தின் தொடக்கம்
திரைப்படங்கள், பானி அறக்கட்டளை என நாங்கள் தொடர்ந்து ஒன்றாக பணியாற்றுவோம். எங்கள் உறவில் ஏற்பட்ட இந்தப் பரிணாம வளர்ச்சியை புரிந்துகொண்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், புரிதலுக்கும் எங்களது நன்றிகள்.
உங்களின் நல்வாழ்த்துகள் மற்றும் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு வேண்டும். எங்களைப் போலவே - இந்த விவகாரத்தை நீங்கள் ஒரு முடிவாக அல்ல, ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாகக் காண்பீர்கள் என்று நம்புகிறோம்” என இருவரும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ரீனா தத்தா
அமிர் கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ் ஆவார். முன்னதாக அமிர் கான் ரீனா தத்தாவை திருமணம் செய்திருந்தார். இவர்கள் இருவருக்கும் ஜூனைத் கான் என்ற மகனும் இரா கான் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2002ஆம் ஆண்டு பிரிந்தார்கள். அதன்பின்னர் அமிர் கான் கிரண் ராவ்வை திருமணம் செய்து கொண்டார். கிரண் ராவ்- அமிர் கான் தம்பதியருக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார்.
இதையும் படிங்க : மருமகளின் முதல் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்த அமிர் கான்!