டெல்லி: இன்றைய நவீன காலகட்டத்தில், அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகமாகி வருகிறது. யூபிஐ மூலம் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிமாற்ற சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் மூலம் பண பரிமாற்றம் செய்யும் விதமாக வாட்ஸ்அப் பே வசதியை கடந்த 2020 ஆம் ஆண்டு அந்நிறுவனம் தொடங்கியது. தற்போது வரை இந்த சேவையை மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ்அப் பயனாளி ஒருவர் தனது காண்டாக்ட்டில் உள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி அனுப்பிக் கொள்ளலாம். அதே போல், காண்டாக்ட்டில் உள்ளவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவராக கடந்த செப்டம்பர் மாதம் வினய் சோலட்டி பதவியேற்றார். இந்நிலையில் திடீரென வினய் சோலட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற அவர் நான்கே மாதங்களில் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் மனேஷ் மஹாத்மே ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமாவுக்குப் பிறகு வினய் சோலட்டி தனது லிங்க்ட் இன் பக்கத்தில் கூறியபோது, “இன்றுடன் நான் வாட்ஸ்அப் பே நிறுவனத்தில் இருந்து விடை பெறுகிறேன். இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது ஒரு சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. என்னால் முடிந்தவரை வாட்ஸ்அப் பே செயலி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினேன். வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தியதில் எனக்கும் ஒரு சிறு பங்கு உள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.