சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் பயனர்கள், இதுவரை இலவச சேவையாக அனுபவித்து வந்த ஆன்லைன் டாஸ்போர்டு சேவையான ட்வீட் டெக் அம்சத்தை, இனி ட்விட்டர் புளூவுக்கு சந்தா செலுத்தி, அதாவது வெரிஃபைடு பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ட்விட்டர் பயனர்கள் தாங்கள் பின்பற்றும் கணக்குகளை வெவ்வேறு நெடுவரிசைகளில் ஒழுங்கமைத்து உள்ளடக்கத்தை எளிதாகக் கண்காணிக்க அனுமதிக்கும் TweetDeck அம்சம், வணிக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
இனி, இந்த அம்சத்தை, சரிபார்க்கப்பட்ட (அல்லது) வெரிஃபைடு அதாவது Twitter blue குறியீடு பெற ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சந்தா தொகை கட்ட வேண்டும். இனி, அத்தகைய பயனர்களுக்கு மட்டுமே, இந்த TweetDeck வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று, ட்விட்டர் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இந்த புதிய நடைமுறை, அடுத்த 30 நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று ட்விட்டர் நிறுவனம், அதன் ட்வீட் பதிவில் குறிப்பிட்டு உள்ளது. எலான் மஸ்க் தலைமையின் கீழ், விளம்பரதாரர்களைத் தக்க வைக்கப் போராடிய ட்விட்டர் நிறுவனத்திற்கு, இந்த நடைமுறை, வருவாயை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்வீட்களைப் பார்க்க பயனர்கள், ட்விட்டர் இணையதளப் பக்கத்தில் உள்நுழையும் போது, சரிபார்க்கப்படாத கணக்குகளுக்கு ஒவ்வொரு நாளும் பார்க்கக்கூடிய ட்வீட்களின் எண்ணிக்கையை 1,000ஆகக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட, பல கடுமையான மாற்றங்களை எலான் மஸ்க் அறிவித்து உள்ளதன் பரபரப்பு அடங்குவதற்குள், TweetDeck குறித்த அறிவிப்பு, அதன் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
TweetDeck வசதியில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றம், ட்விட்டர் ப்ளூ திட்டத்திற்கு அதிகமான பயனர்களை ஈர்க்கும் முயற்சியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் சரிபார்ப்பு நிகழ்வுக்கு, பணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்த சந்தா சேவையைப் பெற இந்திய பயனர்கள், iOS அல்லது Android என எந்த சேவையை பயன்படுத்தினாலும் மாதம் ஒன்றிற்கு, 11 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.900 சந்தா கட்ட வேண்டும்.
Mashable இன் அறிக்கைகளின்படி, இந்த சேவை அதன் முதல் வாரங்களில் வெறும் 150,000 சந்தாதாரர்களை ஈர்த்து இருந்தது. இது, சர்வதேச அளவில், கிட்டத்தட்ட 400 மில்லியன் பயனர்கள் கொண்ட தளத்தின் ஒரு சிறிய பகுதியே ஆகும். ஏப்ரல் 30ஆம் தேதி வரை, பணம் செலுத்திய சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 68,000 ஆகக் குறைந்து உள்ளது.
இதையும் படிங்க: பாரத் 6ஜி தொழில்நுட்பம் அறிமுகம்... 2030க்குள் அதிவேக இணைய சேவை வழங்க திட்டம்!