அமெரிக்கா: குறைந்தபட்சம் அடுத்த 100 ஆண்டுகளுக்கு அபோபிஸ் விண்கல் மனிதர்கள் வாழும் பூமியைத் தாக்காது என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியுள்ளது.
நாசா ஆய்வு நிறுவனம் 2004ஆம் ஆண்டு `அபோபிஸ்` என்கிற விண்கல்லைக் கண்டுபிடித்தது. அது மிகவும் ஆபத்தானது எனக் கருதப்பட்டது. அந்த விண்கல் 2029ஆம் ஆண்டு, 2036ஆம் ஆண்டுகளுக்கிடையில் புவியைத் தாக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த ஆண்டுகள் பலமுறை மாறுபட்டு கணிக்கப்பட்டுவந்தன.
ஆனால் தற்போது, அந்த விண்கல் தொடர்பான புதிய ஆய்வுகளின் அடிப்படையில் நாசாவுக்காகப் புவிக்கு அருகில் இருக்கும் பொருள்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் டேவிடே ஃபர்நோச்சியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "எங்கள் ஆய்வில் அபோபிஸ் விண்கல்லால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆபத்து ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.
'அபோபிஸ்' என்கிற சொல் எகிப்திய கடவுளைக் குறிக்கிறது. 340 மீட்டர் பரப்பைக் கொண்ட இந்த விண்கல்லின் நீளம் பிரிட்டனின் மூன்று கால்பந்து மைதான அளவு கொண்டது. இந்த விண்கல் மார்ச் 5ஆம் தேதி புவிக்கு அருகில், 10 மில்லியன் மைல் தொலைவுக்குள் பறந்துசென்றது. இந்த எரிகல் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு புவிக்கு மிக அருகில் வரும் எனக் கூறப்பட்டிருந்தது.
அந்த தேதியில் அபோபிஸ் விண்கல், உலகின் பரப்பிலிருந்து 32,000 கிலோமீட்டர் தொலைவில் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையில் இருக்கும் தொலைவில் பத்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய விண்கற்கள் குறித்து நாசா கண்காணித்துவருகிறது. அந்த வகையில் மூன்று ஆபத்தான விண்கற்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1950DA, 2010RF12, 2012HG2 என அந்த மூன்று விண்கற்களுக்கு நாசா பெயரிடப்பட்டுள்ளது.