ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் பகுதியைச் சேர்ந்தவர், நீரஜ் ஷர்மா. 20 வயதான இவர், போடர் இண்டர்நேஷனல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிசிஏ படித்து வருகிறார். இணையதள காதலரான இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள பிழைகளை (Bugs) கண்டுபிடிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
முதலில் இன்ஸ்டாகிராம் விளம்பர பக்கத்தில் தனது ஆய்வினைத் தொடங்கியவர், பின்னர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பகுதியில் தனது ஆராய்ச்சியை நகர்த்தியுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பகுதியின் கவர் போட்டோ மற்றும் thumbnail பகுதியில் சில மாற்றங்களை மேற்கொள்ளும்போது பிழைகள் ஏற்பட்டுள்ளது.
இதனை பல்வேறு மறுசோதனைகளுக்கு பிறகு மெட்டா நிறுவனத்திற்கு நீரஜ் அனுப்பியுள்ளார். இதற்கு மூன்று நாட்கள் கழித்து பதில் கூறிய மெட்டா, பிழையை மீண்டும் டெமோ செய்ய பரிந்துரைத்துள்ளது. இதனை ஏற்ற நீரஜ் அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
எனவே கடந்த மே 11 அன்று இன்ஸ்டாகிராம் பிழையை கண்டறிந்ததற்காக 45,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் 35 லட்சம் ரூபாய்) பரிசாக மெட்டா அறிவித்துள்ளது. மேலும் பரிசுத்தொகையை அறிவிப்பதற்கு நான்கு மாதங்கள் தாமதித்ததால் கூடுதலாக 4,500 டாலர் (இந்திய மதிப்பில் 3 லட்சம் ரூபாய்) பரிசையும் மெட்டா அறிவித்துள்ளது.
இவ்வாறு மொத்தமாக 38 லட்சம் ரூபாயை பரிசாக பெற்ற நீரஜ் கூறுகையில், “எதிர்பாராத நேரத்தில் மெட்டா நிறுவனத்தின் பிழையை நான் கண்டறிந்தது எனக்கே மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. நான் உடனடியாக மெட்டா நிறுவனத்தை தொடர்பு கொண்டேன்” என்றார்.
இதையும் படிங்க: பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியாகவுள்ள Fortnite வீடியோ கேம்