சான்பிரான்சிஸ்கோ: உலகம் முழுவதும் கார்பன் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் கார்பனுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த திட்டங்களை வகுத்து வருகின்றன. இந்த திட்டங்களுக்கு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவு தெரிவித்துவருகின்றன. அந்த வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் தரவு மையங்களின் செயல்பாடுகளை உருவாக்க கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளன.
கூகுள் நிறுவனம், முதல்கட்டமாக இங்கிலாந்தில் உள்ள தரவு மையங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தப்பட்ட திட்டமிட்டுள்ளது. பிரெஞ்சு நிறுவனமான என்ஜி உடன் 100 மெகாவாட் ஆற்றலுக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆற்றல் காற்றாலை மூலம் உருவாக்கப்பட உள்ளது. இங்கிலாந்து மக்கள் காலநிலை மாற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை கூகிள் உறுதிசெய்யும் என்று அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனம் அயர்லாந்தில் 900 மெகாவாட்டிற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒப்பந்தத்தை ஸ்டேட்கிராஃப்ட் மற்றும் அயர்லாந்தின் எனர்ஜியா குரூப் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் கலிபோர்னியாவில் உள்ள தரவு மையங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை உறுதி செய்யும் நோக்குடன் ஏஈஎஸ் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்துடன் 110 மெகாவாட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த ஓரியன் விண்கலம்