கரோனா வைரஸ் சூழலுக்கு நடுவே உலகம் முழுவதும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த சைபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள தரவுகளை திருடுகின்றனர். அதேபோல் சர்வர்களை ஹேக் செய்து மில்லியன் டாலர்கள் கணக்கில் மிரட்டி பணம் கேட்கின்றனர்.
இந்நிலையில் ஹேக்கர்களால் ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் பல்கலைக்கழக மருத்துவமனை ஹேக் செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வரலாற்றில் நோயாளி ஒருவரின் உயிரிழப்பிற்கு ஹேக்கர்கள் காரணமாக அமைந்தது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி சியரன் மார்ட்டின் கூறுகையில், '' இந்த மரணத்திற்கு ஹேக்கர்களால் காரணம் என உறுதி செய்யப்பட்டால், சைபர் தாக்குதலுடன் நேரடியாக இணைக்கப்பட்ட முதல் மரணம் என்று பதிவு செய்யப்படும்.
ரேன்சம்வேர் தாக்குதலைப் பயன்படுத்தி அதிகமாக பணம் பறிக்கப்பட்டு வருகிறது. ரேன்சம்வேர் மூலம் நமது தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளை நிறுத்த முடியும். அதனால் மருத்துவமனையில் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடத்தினால், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது'' என்றார்.
முன்னதாக அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனம் ஹேக்கர்களால் ரேன்சம்வேர் மூலம் தாக்கப்பட்டது. அதிலிருந்து மீட்க, 10 மில்லியன் டாலர் வரை விரயம் செய்ய வேண்டியிருந்தது.
ஜனவரி முதல் அறியப்பட்ட சிட்ரிக்ஸ் மெய்நிகர் தனியார் நெட்வொர்க் மென்பொருளில் பாதிப்புக்குள்ளானதை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொண்டதாக ஜெர்மன் அலுவலர்கள் கூறுகின்றனர். இதனை மருத்துவமனை எதிர்கொள்ளத் தவறிவிட்டது என தெரிகிறது.
இதையும் படிங்க:இணைய தாக்குதல்களுக்குப் பலியாகும் இந்திய நிறுவனங்கள்