டெல்லி: சந்திரயான் 3 என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவால் மூன்றாவதாக நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்படும் விண்கலமாகும். இதற்கு முன்னதாக சந்திரயான் 1, 2008ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் நிலவில் (உறைநிலையில்) தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது.
இதையடுத்து நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்யும் நோக்கில், சந்திரயான் 2 விண்கலம் 2019ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து சந்திரயான் 2, ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது. செப்டம்பர் 2ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து 'விக்ரம்' என்ற லேண்டர் பிரிந்து நிலவில் தரையிறக்கப் புறப்பட்டது.
விக்ரம் லேண்டர், செப்.7ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் இறங்க 2.1 கி.மீ. தொலைவே இருந்த நிலையில், கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் விக்ரம் லேண்டர் திட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று மக்களவையில் இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விண்கலத்திலும் லேண்டர், ரோவர் அனுப்பட்டு, நிலவில் தரயிறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை வெற்றிகரமாக லேண்டர் நிலவில் தரையிறப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நிலவில் விழப்போகும் எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்