ola electric scooters: உலக நாடுகள் அனைத்தும் கார்பன் வெளிபாட்டை குறைக்க அதிசிறந்த மின்சார வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவும் சற்றும் சளைக்காமல் மின்சார வாகனத் தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது. டிவிஎஸ் ஐகியூப், பியாஜியோ வெஸ்பா, ஏத்தர் போன்ற நிறுவனங்கள் தங்களின் மின்சார இருசக்கர வாகனங்களை பெருவாரியாக இந்தியாவில் சந்தைப்படுத்தினர்.
எனினும், வாகனங்கள் குறைந்த தூரமே இயக்க முடியும், மீண்டும் சார்ஜ் செய்யும் வசதியின்மை போன்ற காரணங்களால் இந்த வாகனங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.
மெகா திட்டத்தில் இறங்கிய ஓலா
இந்த நேரத்தில் தான் வாடகை கார் நிறுவனமான ஓலா, தனது முதல் ஓலா மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. நெதர்லாந்தைச் சேர்ந்த எட்டர்கோ எனும் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனத்தை தன்வசப்படுத்தி, இந்த முயற்சியில் ஓலா இறங்கியது.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி மின்சார ஸ்கூட்டர்களை தயாரிக்கும் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட ஆலையை நிறுவிவருகிறது, ஓலா. பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த ஆலை அமைக்கும் பணியில், வாகன உற்பத்தியை நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், எலெக்ட்ரிக் வாகனப் பயனர்களுக்கு பெரும் தடையாக இருந்த, சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு ஓலா தீர்வளித்தது. ஆம். இந்தியா முழுவதிலும் 100 நகரங்களில் 5000 அதிவிரைவாக சார்ஜ் செய்யும் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளை நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது.
முன்பதிவுக்கு முண்டியடித்த மக்கள்
தொடர்ந்து 10 வண்ணங்களில் தங்கள் ஓலா மின்சார ஸ்கூட்டரை இணையத்தில் அறிமுகப்படுத்தி, ரூ.499 செலுத்தி பயனர்கள் பதிவு செய்யலாம் என்று நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
பல அம்சங்கள், சார்ஜ் செய்ய எளிமையான வசதிகள் என ஓலா பயனர்களை குஷிப்படுத்த, முன்பதிவு தொடங்கிய 24 மணிநேரத்தில் ஒரு லட்சம் வாகனங்களை பயனர்கள் பதிவுசெய்தனர். இது ஒரு சாதனையாகப் பார்க்கப்பட்டாலும், ஓலா நிறுவனம் பயனர்களுக்கு அளித்த நம்பிக்கை என்றே இந்த அளவுக்கதிகமான பதிவுகளை நிறுவனம் பெற்றதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதாவது, வாகனம் குறித்த விளம்பரங்களில் தங்களுக்குப் போட்டியாக இருக்கும் ஸ்கூட்டர்களை ஓரங்கட்டும் அளவுக்கு அம்சங்கள் அள்ளித் தருவதாக நிறுவனம் உறுதியளித்திருந்தது. விலையும்கூட போட்டி நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த முழு விவரங்களையும், சுதந்திர தினமான இன்று நிறுவனம் வெளியிட்டது.
ஓலா எஸ் 1, எஸ் 1 ப்ரோ ஆகிய இரு மாடல்கள் 10 நிறங்களில் இந்திய சாலைகளில் களமாட வருகிறது என்று நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தது. ஸ்கூட்டரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
தோற்றம்
மேட் பினிஷ், குளாசி பினிஷ் என மொத்தம் 10 கவர்ச்சிகரமான நிறங்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி இண்டிகேட்டர், 7 அங்குல முழு அளவு தொடுதிரை கொண்டிருக்கும் இதன் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், ஆக்டாகோர் ப்ராசஸர் திறனுடன், 3 ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது.
இரண்டு தலைக்கவசங்கள் வைக்கும் அளவிலான பூட் ஸ்பேஸ், தெஃப்ட் அலாரம் ஆகியவையும் இதில் அடங்கும்.
செயல்திறன்
வாகனத்தின் திறனைப் பொறுத்தவரை 8.5 கிலோ வாட் திறன் கொண்டுள்ளது. இதன்மூலம் 0 முதல் 40 விநாடிகளை 3 நொடிகளில் எட்ட முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.
வீட்டில், ஓலாவின் பிரத்யேக 750 வாட் போர்டபிள் சார்ஜரை நிறுவி, அதன்மூலம் வாகனத்தை 6 மணிநேரங்களில் சார்ஜ் செய்து விடலாம். நார்மல், ஸ்போர்ட்ஸ், ஹைப்பர் ஆகிய மூன்று மோடுகளில் வாகனத்தை செலுத்தி சுகமான பயணத்தை மேற்கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
தொழில் நுட்பத்தைப் பொறுத்தவரை, வழிகாட்டியாக மேப்ஸ், ஒலி மூலம் வாகனத்தை இயக்கும் வாய்ஸ் அசிஸ்டன்ட், சரிவான பகுதிகளில் வாகனம் பின்புறமாக செல்லாமல் இருக்க ஹில் ஹோல்ட் மோட், ஒரே வேகத்தில் வாகனத்தைச் செலுத்த குரூஸ் கண்ட்ரோல், லாக், அன்லாக் சென்சார்கள், ஸ்பீக்கர்ஸ், தேவைக்கேற்ப வாகன ஒலியை மாற்றிக்கொள்ளும் வசதி என அசத்தலான அதிரடி சிறப்பம்சங்கள் பயனர்கள் அனுபவிக்கும் வகையில், ஓலா மின்சார இருசக்கர வாகனத்தில் உள்ளது.
4ஜி, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் ஸ்கூட்டரில், மூவ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.
நிறங்கள்
பிட்ஜ், மஞ்சள், வெள்ளை, இளஞ்சிவப்பு, சாம்பல், அடர் சாம்பல், அடர் நீலம், சியான், கருப்பு, சிவப்பு ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.
விலை
எஸ் 1, எஸ் 1 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் தற்போது சாலைகளில் பயணிக்கத் தயாராக இருக்கிறது. அதில் எஸ் 1, ரூ.99ஆயிரத்து 999க்கும், எஸ் 1 ப்ரோ, ஒரு லட்சத்து 29ஆயிரத்து 999 ரூபாய்க்கும் தமிழ்நாட்டுச் சந்தையில் கால்பதிக்க இருக்கிறது.