சான் பிரான்சிஸ்கோ : ஆப்பிள் நிறுவனத்திற்கும் - மசிமோ என மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் நீண்ட காலமாக காப்புரிமை பிரச்சினை நீடித்து வருகிறது. ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட்டு சொல்லும் SpO2 sensor தொழில்நுட்பம் தான் ஆப்பிள் மற்றும் மசிமோ மருந்து நிறுவனத்தின் இடையே ஏற்பட்டு உள்ள பஞ்சாயத்திற்கான காரணமாகும்.
காப்புரிமை மீறல் விவகாரம் தொடர்பாக மருந்து நிறுவனமான மசிமோ, சர்வதேச வர்த்தக ஆணையத்திடம் முறையிட்டது. இது குறித்து கடந்த அக்டோபர் நடந்த விசாரணையில், ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை மீறலில் ஈடுபட்டதா என விசாரிக்கப்பட்டது. விசாரணையில் மசிமோ நிறுவனத்தின் காப்புரிமை அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் சட்டவிரோதமாக மீறி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து Watch Series 9 மற்றும் Watch Ultra 2 பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு சர்வதேச வர்த்தக ஆணையம் தடை விதித்து உள்ளது. ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து Watch Series 9 மற்றும் Watch Ultra 2வாங்குவதற்கான கடைசி நாள் டிசம்பர் 24 ஆகும், அதே நேரத்தில் இறக்குமதி தடை அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தற்போது வரை Watch Series 9 மற்றும் Watch Ultra 2 பொருட்கள் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 26ஆம் தேதிக்கு பின்னர் சர்வதேச வர்த்தக ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் இந்த இறக்குமதி மற்றும் விற்பனை தடை அமெரிக்காவில் மட்டுமே அமலில் இருக்கும் என்றும் மற்ற நாடுகளில் Watch Series 9 மற்றும் Watch Ultra 2 பொருட்களின் விற்பனை வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரத்தத்தில் உள்ள குலுக்கோஸ் அளவு மற்றும் உடலின் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் சென்சார்களை தயாரிக்கும் நிறுவனமான மசிமோவின், ரத்த ஆக்சிஜன் அளவு தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை விதிகளை மீறி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : எக்ஸ் சமூக வலைதளம் திடீர் முடக்கம்! வெளியான காரணம்?