நாட்டின் விடுதலைக்காக போராடிய கதாநாயகர்கள் என்றுமே மறைவதில்லை. ஆண்டுகள் பல உருண்டோடினாலும் இந்த கதாநாயகர்கள் வரலாற்றில் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கின்றனர்.
அவர்கள் ஏற்றிவைத்த தீபம் மகாபிரகாசமாக ஒளி கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. அந்த ஒளிதான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். மறைந்து 77 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவர் தேசத்தை பல வழிகளில் வழிநடத்திவருகிறார். இவரின் 125ஆவது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட்டில் கிரானைட் கற்களால் ஆன இவரது பிரமாண்ட சிலை ஒன்று அமைக்கப்படவுள்ளது.
முன்னதாக இந்த இடத்தில் இங்கிலாந்து மன்னரான 5ஆம் ஜார்ஜ்-இன் 70 அடி உயர சிலை இருந்தது. இந்தச் சிலை 1968ஆம் ஆண்டு அகற்றப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கு சிலை வைக்கும் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜன.21) அறிவித்தார்.
அப்போது, “ஒட்டுமொத்த தேசமும் நேதாஜியின் 125ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் அவருக்கு டெல்லி இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கற்களால் ஆன பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்பதை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது அவருக்கு நாடு கடன்பட்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாக திகழும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், “நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை கட்டி முடிக்கும் வரை, அதே இடத்தில் அவரது ஹாலோகிராம் சிலை இருக்கும். நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி ஹாலோகிராம் சிலையை திறந்து வைப்பேன்” எனவும் தெரிவித்து இருந்தார்.
இம்பீரியல் வார் கிரேவ்ஸ் கமிஷனின் (IWGC) பணியின் ஒரு பகுதியான இந்தியா கேட், முதல் உலகப் போரில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவின் வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது.
பின்னர், 1971 வங்காளதேச விடுதலைப் போருக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் 1971 இல் உயிர்நீத்த வீரர்களின் நினைவுகளை அழியாத வகையில் 'அமர் ஜவான் ஜோதி' என்ற 'நித்திய சுடர்' அமைத்தது.
1971 போருக்குப் பிறகு வீழ்ந்த வீரர்களுக்கு இந்தியா கேட்டில் நினைவுச் சின்னங்கள் இல்லை, இதன் விளைவாக ஒரு 'வரலாற்று ஒழுங்கின்மை' ஏற்பட்டது.
நேதாஜியின் ஹாலோகிராம் வரலாற்றின் இருண்ட பக்கங்களை ஒளிரச் செய்வதில் முன்னணியில் இருக்கும். ஆகையில் இங்கிருக்கும் அமர் ஜவான் ஜோதி தேசிய போர் நினைவிடத்தில் வைக்கப்படும். இதனால் மற்றொரு வரலாற்று நிகழ்வு சரி செய்யப்படும்.
அமர் ஜவான் ஜோதியில் உள்ள சுடர் 1971 மற்றும் பிற போர்களின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களின் பெயர்கள் எதுவும் அங்கு இல்லை. இதுவொரு வித்தியாசமான விஷயம். முதல் உலகப் போரிலும், ஆங்கிலோ-ஆப்கன் போரிலும் ஆங்கிலேயர்களுக்காகப் போராடிய சில தியாகிகளின் பெயர்கள் இந்தியா கேட் மீது பொறிக்கப்பட்டுள்ளன. இது நமது காலனித்துவ கடந்த காலத்தின் அடையாளமாக உள்ளது. இதனை மத்திய அரசும் சுட்டிக் காட்டுகிறது.
1971ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த போர்கள் உள்பட அனைத்து இந்திய தியாகிகளின் பெயர்களும் தேசிய போர் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளன. எனவே அங்கு தியாகிகளுக்கு சுடர் அஞ்சலி செலுத்துவதுதான் உண்மையான நினைவஞ்சலியாக இருக்கும்.
இதையும் படிங்க : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்- ரொட்டித் துண்டு மர்மங்கள்!