தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதுமுள்ள ஊர் தலைவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாடினார். அவர்களில் மூன்று பெண் ஊர் தலைவர்கள் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் சிறப்பான வேலைகளைச் செய்பவர்கள்.
கிராமங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதையும் இவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த மூன்று பெண் தலைவர்களின் செயல்களால் ஈர்க்கப்பட்ட பிரதமர் மோடி, இந்த மாதிரியான தலைவர்கள்தான் நாட்டிற்கு தற்போது தேவை என்றார். இந்த மூன்று பெண்கள் தங்கள் பணிகள் குறித்தும் தங்கள் கருத்துக்களையும் பிரதமருடன் பகிர்ந்துகொண்டனர்.
பிரியங்கா தாஸ் மதங்கர்
மகாராஷ்டிரா மாநில புனே அருகேயுள்ள மேடகர்வாடி என்ற ஊரின் தலைவராக இருக்கும் பிரியங்கா தாஸ் மதங்கர், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரண்டாம் நாளே கிராமத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்தார். வைரஸ் மற்றும் பாக்டீரியா பரவலைக் கட்டுப்படுத்த கிராமம் முழுவதும் ‘சோடியம் ஹைப்போகுளோரைட்’ திரவம் தெளிக்கப்பட்டது.
ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் சில பெண் தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாஸ்க்குகள் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மாஸ்க்குகள் மேடகர்வாடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கிராமத்தில் தனிமைப்படுத்தும் ஒரு இடத்தையும் அவர் அமைத்தார்.
கிராமத்தில் தகுந்த இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். கிராமத்திலுள்ள ரேஷன் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்கப்பட்டன.
வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவர்களுக்குத் தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்களின் வீடுகளுக்கே அத்தியாவசிய பொருள்கள் சென்று சேர்வதை உறுதி செய்தார். இது தவிர, இந்த நெருக்கடியான நேரத்தில் கிராமத்திலுள்ள பெண்களுக்கு நாப்கின்களை ப்ரியங்கா வழங்கினார்.
ப்ரியங்காவின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் பொருள்களுக்குத் தேசிய வேளாண் சந்தையில் (e-NAAM) குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதையும் உறுதி செய்யும்படி கூறினார்.
வர்ஷா சிங்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் ஊரடங்கை மிகச் சிறப்பாக அமல்படுத்திய வெகு சில கிராமங்களில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நக்தி டீ புஜுர்க் கிராமமும் ஒன்று. ஊரடங்கை முறையாக அமல்படுத்த ஒரு சிறப்புத் திட்டத்தையும் அவர் வகுத்தார்.
அனைத்து கிராமவாசிகளையும் ஒரு பொதுவான குடையின் கீழ் கொண்டுவர அங்கன்வாடி, ஏ.என்.எம். ஆகியவற்றின் பணியாளர்களையும் தன்னார்வலர்களையும் ஒன்றிணைத்தார்.
அவர்களுடன் இணைந்து கரோனா பரவலைத் தடுக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விளக்கினார்.
தன்னார்வலர்களுடன் இணைந்து அவரும் மாஸ்க்குகளை உற்பத்தி செய்தார். அதை கிராமத்திலுள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தன்னார்வலர்களின் உதவியுடன் உணவு கிடைப்பதை உறுதி செய்தார். பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா, பிரதமர் கிசான் சம்மான், ஜன் தன் யோஜனா திட்டங்களின் கீழ் பயனடைந்தவர்கள் குறித்த விவரங்களைப் பிரதமர் கேட்டபோது, அதற்கு மிக துல்லியமான விவரங்களையும் வர்ஷா அளித்து அசத்தினார்.
பல்லவி தாக்கூர்
இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டிலுள்ள ஹரா கிரமத்தின் ஊர் தலைவராக இருப்பவர் பல்லவி தாக்கூர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் தேவையான நடவடிக்கைகளைப் பல்லவி மேற்கொள்ளத் தொடங்கினார்.
இளைஞர்களை உள்ளடக்கிய அணி ஒன்றை அமைத்தார். அவர்களுடன் இணைந்து கிராமத்தில் தகுந்த இடைவெளியும் தனிமைப்படுத்தலும் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் மேற்பார்வை செய்தார்.
கிராமத்தினர் வீட்டிலேயே இருப்பதையும் வெளியாட்கள் குமரத்திற்குள் வராமலிருப்பதையும் அந்த அணி உறுதி செய்தது.
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது அறுவடை காலம். இந்தக் காலத்தில் தங்கள் பயிர்களை விற்பதில் விவசாயிகள் கடும் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இது அவர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது.
இந்தச் சிக்கலை எதிர்கொள்ள, அருகிலுள்ள கிராம தலைவர்களுடனும் வியாபாரிகளுடனும் இணைந்து அவர் ஒரு திட்டத்தை உருவாக்கினார். அதன்படி விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன்களைக் கொண்டு சந்தைக்குச் சென்ற விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் பொருள்களை விற்க முடிந்தது. பல்லவியின் நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டினார்.
மேலும், பயிர்களுக்கு யூரியா பயன்படுத்துவதைக் குறைத்து, இயற்கை முறையில் பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். பல்லவி போன்ற இளம் தலைவர்கள், கிராமங்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!