ஹைதராபாத்: நாடு இதுவரை கண்டிராத வகையில், தலைநகர் டெல்லியில் கடந்த 9ஆம் தேதி (டிசம்பர், 2020) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.83.71க்கும், டீசல் விலை 73.87 காசுகளாகவும் விற்பனையானது.
இந்த விலை தொடர்ந்து ஆறு நாள்களாக அவ்வாறே நீடித்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சமும் பொதுமக்களிடத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் பெட்ரோல், டீசல் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 மற்றும் ரூ.3.50 காசுகள் உயர்த்த திட்டமிட்டுள்ளன. நம் நாட்டை பொருத்தவரை பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு இரு காரணங்கள் உள்ளன.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய்
முதல் காரணம் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு. ப்ரெண்ட் கச்சா இந்தியாவின் கச்சா நுகர்வில் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. இந்த ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 49 டாலரைத் தொட்டுள்ளது. இது ஏப்ரல் 2020 இல் ஒரு பீப்பாய்க்கு 19 டாலராக இருந்தது.
இந்தச் சூழலில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையுடன் ஒத்துப்போகும் பொருட்டு, இந்திய அரசு 2010 ஆம் ஆண்டில் உள்நாட்டு பெட்ரோல் விலையை கட்டுப்படுத்தியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியாக, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயரும்போது உள்நாட்டு எரிபொருள் விலை உயரும். சமீபத்திய ஒபெக் பிளஸ் ஒப்பந்தம் (OPEC- பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு ) உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வின் விளைவாக உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுத்தது.
கோவிட் தடுப்பூசி
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இரண்டாவது காரணம், கோவிட்-19 பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டிருப்பதும், கோவிட் தடுப்பூசி விரைவில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதும் ஆகும்.
இதனால் பெட்ரோல், டீசலுக்கு ஏற்பட்டுள்ள தேவை விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளது.
புரியாத புதிர் வரி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்நாட்டில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள நிலையில் 29 காசுகள் அதிகரித்தாலும் தேசிய தலைநகர் இதுவரை பதிவு செய்யாத மிக உயர்ந்த இடத்தில் பெட்ரோல் விலை இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 டாலராக இருந்தபோது, கடைசியாக அவை அக்டோபர் 4, 2018 அன்று லிட்டருக்கு ரூ.84ஐ தொட்டன.
தற்போது ஒரு பீப்பாய்க்கு 49 டாலர் என்ற அளவில் உள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீது மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கலால் மற்றும் வாட் வரியை விதித்துள்ளன.
வாசகர்கள் கவனிக்க: இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்!
உதாரணமாக டெல்லியில் மாநில அரசின் வரி பங்களிப்பு பெட்ரோலில் 63 சதவீதமாகவும், டீசலில் 60 சதவீதமாகவும் உள்ளன. கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்புக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களின் நிதிகளை பேரழிவிற்கு உட்படுத்தின.
இதனால், தொற்று காலங்களில் அதிகரித்து வரும் செலவினங்களை ஈடுசெய்ய, கூடுதல் வருவாயை ஈட்டுவதற்காக எரிபொருள் மீதான வரிகளை மேலும் அதிகரித்தனர்.
பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு கலத்தின் (பிபிஏசி) படி, ஏப்ரல் 2020 முதல் டெல்லியில் பெட்ரோல் விலை 56 முறை திருத்தப்பட்டது மற்றும் டீசல் விலை 67 முறை திருத்தப்பட்டது.
செப்டம்பர்-அக்டோபர் 2020 க்கு இடைப்பட்ட காலத்தைத் தவிர, இந்த விலைகள் ஒரு உயர்ந்த போக்கைக் கண்டன. உண்மையில், கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தபோது, அந்தந்த அரசாங்கங்கள் உள்நாட்டு எரிபொருள் விலைகளுக்கு வரி விதித்து, உலகளாவிய எண்ணெய் விலையிலிருந்து கிடைக்கும் லாபத்தை ஈடுசெய்தன.
இருப்பினும், உலகளாவிய கச்சா விலை குறைவாக இருந்ததால் நுகர்வோர் இதனை உணரவில்லை. இப்போது அவர்களும் புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் காரணமாக உயர்த்தத் தொடங்கிய நிலையில், அதிக வரிகளின் பாதிப்பு தற்போது உணரப்படுகிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பு
எரிபொருளுக்கு கூடுதலாக வரி விதிப்பது கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கு அரசாங்கங்களுக்கு குறைந்த லாபத்தை கொடுத்தாலும், தொடர்ச்சியான அதிகரிப்பு எதிர் விளைவுகளுக்கும் வழிவகுக்கும்.
முதல் மற்றும் முக்கியமாக, எரிபொருளின் அதிக விலை பொருளாதாரத்தில் பணவீக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.6 சதவீதமாக உள்ளது, இது அதன் ஏழு ஆண்டு உயர்விற்கு அருகில் உள்ளது.
பார்க்லேஸின் மதிப்பீட்டின்படி, கச்சா எண்ணெய் விலையில் ஒரு பீப்பாய்க்கு 10 டாலர் அதிகரிப்பு எரிபொருள் விலையை பம்பில் லிட்டருக்கு ரூ.5.8 ஆக உயர்த்த வழிவகுக்கும்.
மேலும், வரிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று கருதி இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது. வரிகளைக் கருத்தில் கொண்டால் இது இன்னும் அதிகமாக இருக்கும்.
மறுபுறம், புதுப்பிக்கப்பட்ட தேவை காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது வரவிருக்கும் நேரத்தில் கடுமையான சவாலாக இருக்கும்.
உண்மையில் இது பணவீக்கத்தின் மீதான எரிபொருள் விலையின் விளைவை தருகிறது. அவை கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதிக எரிபொருள் விலையின் இரண்டாவது ஆபத்து விலை அழுத்தம் காரணமாக தேவை வீழ்ச்சியடையக்கூடும். இது மேக்ரோ-பொருளாதார ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும். எரிபொருளுக்கான கூடுதல் செலவினம் நுகர்வோரின் கையில் உள்ள வருமானத்தை குறைக்கும்.
இதனால் தேவை குறைகிறது, இது நீண்ட காலத்திற்கு கடுமையான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும். மூன்றாவதாக, சாலை வழியாக சரக்குப் போக்குவரத்துக்கு டீசல் பரவலாக எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அதிக டீசல் விலைகள் போக்குவரத்துத் துறைக்கும், அதைச் சார்ந்திருக்கும் மக்களுக்கும் ஒரு அடியாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் கடந்து வரும் தொற்றுநோய் காரணமாக, நாடு முழுவதும் பொது போக்குவரத்து இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை. மக்கள் தனிப்பட்ட வாகனங்களை நம்பியுள்ளனர். அதிக எரிபொருள் விலைகள் அவர்களின் நிதி நிலையை மோசமாக்கும். ஏற்கனவே கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது. இது தொடர்ந்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் மந்தமாகும்.
இந்தச் சாத்தியமான விளைவுகள் அனைத்தும் அரசாங்கங்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஒரு முக்கியமான கொள்கை படிப்பினைகளைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் இந்தத் தயாரிப்புகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்கின்றன. அவை சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் நேரடியாக பாதிக்கக்கூடும்.
வரிகளை குறைப்பது அல்லது சிறிது நேரம் உயர்த்தாமல் இருப்பது அதிக எரிபொருள் விலையிலிருந்து எழும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்காது. எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சிறந்த பொருளாதார திட்டங்களை கையாள கொள்கை வகுப்பாளர்களுக்கு இது போதுமானதாக இருக்கும்.
வருங்காலங்களில் நாட்டின் கொள்கை வடிவமைப்பாளர்கள் நீண்டகால தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, புதுப்பிக்க இயலாத மரபுசார் இயற்கை வளமான பெட்ரோலியம் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டை குறைப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க மற்றும் தூய்மையான ஆற்றலை வளர்ப்பதற்கும் தேவையான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும்!
கட்டுரையாளர்: முனைவர். மகேந்திர பாபு குருவா, உதவி பேராசிரியர் ஹெச்.என்.பி. ஹார்வால் மத்திய பல்கலைக்கழகம், உத்தரகாண்ட்.
இதையும் படிங்க: புதிய உச்சத்தை தொடும் பெட்ரோல்!