கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவின் கள ஆய்வுக்கூட்டம் ஒசூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். இந்தநிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.பி முனுசாமி கூறியதாவது,"அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது" என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் பிரிகிறதா அதிமுக..? திருநெல்வேலி அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் கைகலப்பு..!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கே.பி முனுசாமி அளித்த பதில்களைப் பார்ப்போம்.
- அதிமுகவின் பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் மோதல் குறித்த கேள்விக்கு: அதிமுக ஜனநாயக கட்சி, ஜனநாயகம் உள்ள இடத்தில் தான் கேள்வி இருக்கும். அங்கு தான் சண்டை வரும், அதிமுக ஜனநாயகம் உள்ள கட்சி.
- காங்கிரஸ் கோஷ்டி போலவே அதிமுகவில் கோஷ்டி உள்ளதே என்கிற கேள்விக்கு: காங்கிரஸ் கோஷ்டி போல அதிமுகவில் கோஷ்டி இல்லை. காங்கிரஸ் கட்சியில் 4 பேர் இருந்தால் 5 கோஷ்டி இருக்கும்.
- அதிமுக நலன் சார்ந்து பாஜக உடன் கூட்டணி வேண்டாமென திருமாவளவன் பேசுவது குறித்த கேள்விக்கு: திருமாவளவன் தமிழகத்தில் பாஜக காலூன்றக் கூடாது என நினைக்கக் கூடியவர். அதற்காக அவர் அதிமுக நலன் சார்ந்து பேசுகிறாரா? சுயநலமாகப் பேசுகிறாரா என தெரியவில்லை. ஆனால் அவர் பேசுவது எங்கள் நலனுக்கானது என்றே எடுத்துக்கொள்வோம்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்