சென்னையின் மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்ட அதே நாளில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனைக்கு பிறகு விடுதலையான அவரது தோழி வி.கே. சசிகலா, தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட கட்சி பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்.
தற்போது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (இபிஎஸ்) கட்டுப்பாட்டில் இருக்கும் ஆளும் அதிமுகவில் உயர் பதவியை அடையும் வரை அவர் ஓய மாட்டார் என்று சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
கூட்டணி சிறப்பாக செயல்படுவதற்காக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் உடன் சமரசமாக செல்ல பாஜக உயர்மட்ட தலைவர்கள் சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனுடன் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
அதிகாரம்
அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, சமரசத்தின் ஒரு பகுதியாக கட்சியின் தலைமை வழங்கப்பட்டால் சசிகலா அதை ஏற்றுக்கொள்வார். அது அவருக்கு அளிக்கப்படவில்லை என்றால், அவர் அதிமுகவைத் தோற்கடிப்பதற்காக செயல்படுவார். தொடர்ச்சியாக, ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் பதவியிலிருந்து வெளியேற்றி, கட்சியில் இருந்து பலர் வெளியேறி அவரது கட்டுப்பாட்டுக்கு வருவதற்கு வழிவகுக்கும்.
ஜெயலலிதாவுடனான நெருக்கம் காரணமாகவே சசிகலா சிறைவாசம் அனுபவித்தார் என்பது தேவர் சமூகத்தின் கோட்டையான டெல்டா பகுதியிலும், தென்தமிழகத்திலும் இருக்கும் அவர் சார்ந்த சமூகமக்களின் கணிசமான அனுதாபத்தை வென்றுள்ளது. அவர் அதிகாரத்திற்கு வந்தவுடன், அதிமுகவில் உள்ள சமன்பாடுகள் மாறும் என்று ஒரு அரசியல் பார்வையாளர் கூறினார்.
சசிகலாவால் முதலமைச்சராக கொண்டுவரப்பட்ட இ.பி.எஸ், கட்சி மற்றும் அரசின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மேலும் தான் அதிமுக சட்டப்பேரவை கட்சியின் தலைவராக எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், சசிகலாவால் அல்ல என்றும் கூறி வருகிறார்.
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் தாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக காட்டிக்கொள்ளும் அதே வேளையில், உள்கட்சி வட்டாரங்கள் அவர்களுக்குள் இன்னும் நிலவுகின்ற அதிகார மோதலை அறிந்திருக்கின்றன. ஆளும் தேசிய கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் ஓ.பி.எஸ், தான் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று தன்னை முன்னிறுத்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் தனது தனிப்பட்ட விளம்பர பரப்புரைகளை வெளியிட்டு வருவதிலிருந்து இது தெளிவாகிறது.
சட்ட சிக்கல்
சட்டப்பூர்வமாக, அமமுகவின் தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கும் தனது அக்காள் மகன் டி.டி.வி தினகரனுடன் சசிகலா பணியாற்ற முடியாது, ஏனெனில் அவர் தனக்கு அதிமுக சின்னம் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அவரால் வெளிப்படையாக அமமுகவை ஆதரிக்க முடியாது.
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வும், அமமுக பொதுச் செயலாளருமான தினகரன் தனது சின்னமாவை வரவேற்க சென்றாலும் சசிகலாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எதுவும் கூறவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவை குறிப்பிட்டு அவர்கள் (அதிமுக) கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியிருப்பது இரட்டை இலை சின்னத்திற்கான சட்டப் போரை அவர் தொடருவார் என்பதை குறிக்கிறது.
அதிமுக, அமமுக இருகட்சிகளுமே சமமான நம்பிக்கையில்
முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வனை தொடர்பு கொண்டபோது, இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் சென்னை அடைவார் என்று எதிர்பார்க்கப்படும் சசிகலாவை சமாளிப்பதற்கான அவர்களின் திட்டத்தை கூறுவதாக உறுதியளித்தார்.
சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்த அதிமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் ஆர்.எம்.பாபு முருகவேல் கூறும்போது, கட்சிக்கு சசிகலாவின் தலைமை அல்லது வழிகாட்டுதல் எந்த விதத்திலும் தேவையில்லை என்றும், அவர் சிறைத்தண்டனை அனுபவித்த ஒரு குற்றவாளி. அவர் தனது நேரத்தை தனது குடும்பத்தினருடன் நிம்மதியாக செலவிடட்டும், எங்களிடம் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உள்ளனர், அவர்கள் கட்சியையும் அரசையும் கவனித்துக்கொள்வார்கள் என்றும் கூறினார். சசிகலாவுடன் இணைந்து செயல்படுவது என்பதை பொறுத்தவரை, அதற்கான வாய்ப்பு இல்லை என தான் நம்புவதாக முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் கூறினார்.
அமமுக செய்தித் தொடர்பாளர் வீர.வெற்றிபாண்டியன் கூறும்போது, நிச்சயமாக அமமுக மூலம் அதிமுகவை மீட்டெடுப்போம் என்று கூறினர். அதிமுகவை மீட்டெடுக்க எங்கள் அமமுகவை பயன்படுத்துவோம். அதில் எங்களுக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை என்று அவர் கூறினார்.
இந்த திட்டத்திற்கான சசிகலாவின் நடவடிக்கைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய முன்னாள் பத்திரிகையாளர், அவை பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவர் எப்போது, எப்படி தனது நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்று காத்திருப்பதாகவும் கூறினார்.