பாதுகாப்புத் துறை (தயாரிப்பு) செயலரின் தலைமையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த 15 அலுவலர்கள் மற்றும் இந்தியத் தொழில் துறைப் பிரதிநிதிகள் சிலர் அடங்கிய குழு ஒன்று, ஆர்மி-2020 கண்காட்சியை ஆயுதங்களை வாங்குவதற்காகப் பார்வையிட்டுவருவதுடன், ரஷ்யப் பாதுகாப்புத் தொழில் துறையுடன் சேர்ந்து கூட்டு முயற்சிகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் தகவல் சேகரித்துவருகிறது.
ரஷ்ய பாதுகாப்புத் துறையால் நடத்தப்படும் ஆர்மி-2020 ராணுவக் கண்காட்சியில், வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ராணுவத் தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த மே மாதத்துக்குப் பின்னர், வட சிக்கிமில் நடைபெற்ற நிகழ்வும் கிழக்கு லடாக் பகுதியில் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து இந்திய-சீன ராணுவத்தினர் இடையே அபாயகரமான முரண் நிலை எழுந்துள்ளதன் பின்னணியில், இந்தியாவின் இந்த ஆயுத வேட்டை முக்கியத்துவம் பெறுகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில், சீனா அதன் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கையை வெளியிடாமல் இருக்கும் சம்பவம்தான், இதில் மோசமான நிகழ்வாகும்.
இந்திய-சீன உறவுகளில் ஏற்பட்ட மோசமான திருப்பத்தால் ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த துணைத் தலைமைத் தளபதிகளின் மேற்பார்வையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அவசரமாக ஆயுதக் கொள்முதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய சூழலைத் தூண்டியுள்ளது.
எல்லைப் பிரச்னை காரணமாக, அதிகபட்சமாக ரூ. 500 கோடி மதிப்பு கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் ஏற்கெனவே நிறைவடையும் தருவாயில் உள்ளன. கடந்த ஆண்டுகளில் வழக்கமாக 12-15 ஒப்பந்தங்கள் மட்டுமே செய்துகொள்ளப்பட்டு வந்த நிலைக்கு இது நேர் மாறானது.
இந்திய-சீன எல்லைக் கோட்டின் இருபுறங்களிலும் 1,00,000 ராணுவ வீரர்களும் ஏராளமான போர்த் தளவாடங்களும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மிகவும் கடுமையானதும் வசிப்பதற்கு இயலாததுமான இமயமலையின் மிக உயரந்த முகடுகளில் உள்ள ஆழ்ந்த பகுதிகளில் இரு நாட்டு ராணுவங்களுமே குளிர்காலத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.
இந்திய அலுவலர்கள், செவ்வாய்க்கிழமை இரவில் டெல்லி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், கடந்த இரு தினங்களாக அவர்கள், ரஷ்ய அரசு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில் துறைத் தலைவர்களுடன் மிக மும்முரமாக தொடர் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
இந்தியக் குழுவில் பாதுகாப்புத் துறைச் செயலர் மற்றும் தொழில் துறைப் பிரதிநிதிகள் தவிர, பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ஆயுதத் தளவாடத் தொழிற்சாலை வாரியம் (ஓஎஃப்பி) மற்றும் கோவா ஷிப்யார்ட்ஸ் லிமிடெட் போன்ற பல்வேறு பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களின் (டிபிஎஸ்யூ-ஸ்) அலுவலர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
குழுவில் இடம் பெற்றுள்ள அலுவலர் ஒருவர், தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, “ரஷ்யர்கள் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) முயற்சியை மிகவும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வரும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அல்லது சுகோய் 30, எம்கேஐ விமானங்கள் தயாரிப்பு போன்ற வெற்றிகரமான கூட்டுத் தொழில் திட்டங்களின் வரிசையிலான கூட்டு முயற்சிகளில் இந்தியாவுடன் கரம்கோர்ப்பதற்கு ரஷ்யர்கள் ஆர்வமாக இருப்பதைக் காண முடிகிறது” என்றார்.
அவர் ஏகே 203 ரக இயந்திரத் துப்பாக்கி கொள்முதல் தொடர்பான இந்திய-ரஷ்ய ஒப்பந்தத்தின் நிலை என்ன என்பது குறித்துத் தெரிவிக்க மறுத்துவிட்ட போதிலும், இது தொடர்பான பேச்சுவார்த்தையில், ஏகே 203 ரக இயந்திரத் துப்பாக்கிகளை முதலில் இறக்குமதி செய்து கொண்டு, பின்னர் உள்நாட்டிலேயே தயாரிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், இந்தியக் குழுவினருக்கும் சுகோய் போர் விமானங்களைத் தயாரிக்கும் இர்குட் கார்ப்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த அலுவலர்களும் இடையே சந்திப்புகள் நடைபெற்றன என்றும் இந்த நிறுவனத்தார் ஏற்றுமதி நோக்கிலான மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுகோய் 57 ரக ஐந்தாம் தலைமுறை பன்முக போர் விமானத்தை முதன்முறையாக காட்சிப்படுத்த உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ரேடர் பார்வையில் படாமல் மறைந்து செல்லும் திறன் கொண்ட ரஷ்ய விமானப் படையில் சேர்க்கப்படவிருக்கும் இந்த எஸ்யூ 57 ரக போர் விமானம், முதலில் ரஷ்யாவின் மேற்கு ராணுவ மாவட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளது.
உலக அளவில், அமெரிக்காவின் எஃப்-22 மற்றும் எஃப் 35, மற்றும் சீனாவின் ஜே-20 ஆகிய மூன்று போர் விமானங்கள் மட்டுமே அந்தந்த நாட்டு ராணுவங்களில் பயன்பாட்டுக்காக சேர்க்கப்படவுள்ள மறைந்து செல்லும் (ரகசிய) போர் விமானங்கள் ஆகும். இந்த வரிசையில் எஸ்யூ 57 ரஷ்யாவின் முதலாவது போர் விமானம் ஆகும்.
அண்மையில், சீனா அதனிடம் உள்ள இரண்டு ஜே-20 ரக ரகசியப் போர் விமானங்களில் ஒன்றை, எல்ஏசி எல்லைக் கோட்டுக்கு அருகே உள்ள சீன ராணுவ விமானத் தளமான ஹோடான் விமானத் தளத்தில் நிறுத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. சீனாவுக்கு, இந்தியாவுடன் வெளிப்படையாக போர் மூளும் பட்சத்தில், இந்த விமானம் மிக முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரயில் நிலைய கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வியாபாரிகள் கோரிக்கை!